Sifnas Hamy

பயங்கரவாத குழுவின் முழுதையான தொடர்புகளையும் கண்டறிந்தது சி.ஐ.டி.



உயிர்த்த ஞாயிறன்று  தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 250 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் அனுசரணைப் பெற்ற மொஹம்மட் சஹ்ரானின் தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழுவின் அனைத்து  தொடர்புகளும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த தொடர்புகள் குறித்து முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதனால் பல முக்கிய கைதுகள் சாத்தியப்பட்டுள்ளதாகவும் தற்போது அந்த ஒழுங்கமைக்கப்பட்ட  பயங்கரவாத குழுவை பலவீனப்படுத்தி விட்டதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசெகர சுட்டிக்காட்டினார். 
பயங்கரவாதிகளின் அனைத்து தொடர்புகளையும் நாம் தற்போது விசாரணைகளில்  முழுமையாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளோம்.  அவர்களை முழுமையாக நாம் பலவீனப்படுத்திவிட்டோம். சி.ஐ.டி. மற்றும் சி.ரி.ஐ.டி. குழுவினர் முன்னெடுக்கும் விசாரணைகள் மிக வெற்றிகரமாக இடம்பெறுகின்றன.
யாரும் வீணாக வதந்திகளை நம்பி அஞ்ச தேவை இல்லை. நாம் பாதுகாப்பை உறுதிசெய்ய முப்படையினருடன் இணைந்து  சோதனை நடவடிக்கைகளை தொடர்வோம்.  நாட்டில் பல பகுதிகளில் பல முக்கிய கைதுகள் சோதனைகளின் போது இடம்பெற்றுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் நாடளவைய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட  நடவடிக்கைகளில் பல முக்கிய கைதுகள் இடம்பெற்றன. 
தெஹிவளை கைதுகள்
தடைசெய்யப்பட்ட ஜமாத்துல் மில்லதுல் இப்ராஹீமீய்யா அமைப்பின் உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கம்பளையில் கைது செய்யப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான முக்கிய சந்தேக நபர்களான சாதிக் அப்துல்லாஹ் சாஹித் அப்துல்லாஹ் ஆகிய இருவரையும்  விசாரணைக்குட்படுத்தியதில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகவே இம் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை - கவ்டான பகுதியின் ஹில் வீதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.  பொறியியலாளர் ஒருவர், நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று அதிகார தரத்தில் சேவையாற்றும் ஒருவரும் சமயல் காரர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.
கோட்டே மாநகர சபை உறுப்பினரும் சகோதரரும் கைது
கோட்டே மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி தேசியப்பட்டியல் உறுப்பினர்  ஹாஜா மிஹிதீன் அலி உஸ்மான் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் வெலிக்கடை பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய சோதனைகளின் போது கைது இவர்கள் செய்யப்பட்டுள்ளார். 
மூன்று வாள்கள், கத்தி,  இரு தொலைபேசிகளுடன் அவர்கள் நாவல வீதி, பள்ளிவாசலுக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையின்போது கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.
இவர்கள் தெளஹீத் ஜமாத் உறுப்பினர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் மாநகர சபை உறுப்பினரின் வீட்டிலேயே சோதனைகள் இடம்பெற்றதாகவும் பொலிசார் கூறினர்.
கட்டுபொத்த
கட்டுபொத்தை அலஹிட்டியாவ பகுதியில் 25 ஏக்கர் காணியில் அமைந்துள்ள தனி வீடொன்றில் இருந்து 4 வாள்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர் அங்கு இருக்காத போதும், சந்தேகத்துக்கு இடமான குறித்த வீடு தொடர்பில் இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.
கணகராயன் குளத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்
வவுனியா - யாழ். வீதியில் கணகராயன் குளம் பகுதியில் உள்ள முஸ்லிம் ஹோட்டல் ஒன்றின் பின்னால் வைத்து இராணுவத்தினர் பயன்படுத்தும் அழுத்தக் குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஹோட்டலின் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாதுக்கையில் இளைஞர் கைது
பாதுக்கை பொலிஸ்  பிரிவில்  வாடகை வீடொன்றில் வசித்த 28 வயது இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன் அவரது வீட்டை சோதனை செய்த போது 6 இராணுவ சீருடைகள் 8 தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
அத்துடன் வீட்டிலிருந்த திருகோணமலை பகுதியை பதிவாக கொண்ட லொறியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மீட்கப்பட்டுள்ளது. 
சமூக வலைத்தளங்கள் ஊடாக பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்த ஆசிரியர் கைது
கற்பிட்டி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய சமூக வலைத்தளங்கள் ஊடாக பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் முஸ்லிம் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  
அவரிடம் இருந்து மடிக்கனினி இன்றும் நவீன கையடக்கத் தொலைபேசி ஒன்றினையும் மீட்டுள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெலிமடை சுற்றிவளைப்பு
வெலிமடை - சில்மியாபுர பகுதியில் பொலிசார் முன்னெடுத்த சோதனைகளின்போது வீடொன்றிலிருந்து 35 மீட்டர் நீளமான  குண்டு வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் நூல் கைப்பற்றப்பட்டுள்ளது. 
அது தொடர்பில் 59 வயதான அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
டெட்டனேட்டர்களுடன்  அமைச்சர் ஒருவரின் முன்னாள் செயலர் கைது
பிரபல அமைச்சர் ஒருவரின் முன்னாள் செயலர் ஒருவர் 6 டெட்டனேட்டர்களுடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
வெலிமடையில் சிக்கிய தெளஹீத் உறுப்பினர்
தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் எனக் கருதப்படும் நபர் ஒருவர் வெலிமடை - பொரகஸ் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  
ஒரு கோடியே 48 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தொகையுடன் அவர் இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளார். 
வீட்டை சோதனைச் செய்தபோது வாளி ஒன்றுக்குள்ளும் பெட்டி ஒன்றுக்குள்ளும் இந்த பணம் சந்தேகத்துக்கு இடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. சந்தேக நபருக்கு எதிராக கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க பொலிசார் அவதானம்ச செலுத்தியுள்ளனர்.
பொலன்னறுவையில் சிக்கிய தேடப்பட்ட லொறி
பொலன்னறுவை - புலஸ்திபுர பொலிஸ் பிரிவில் சுங்காவில பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த சந்தேகத்துக்கிடமான லொறியொன்றினை பொலிசார் கைப்பற்றினர். 
இ.பி. பி.எக்ஸ். 23991 எனும் இலக்கத்தைக் கொண்ட டிமோ ரக லொறியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
காத்தான்குடி பகுதியில் ஒருவருக்கு சொந்தமான இந்த லொறி இரு மாதங்களுக்கு முன்னர் சுங்காவில நபருக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் லொறியின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்களுடன் இந்த லொறி தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ள நிலையில் இந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது. 
இந்த சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  தம்மிக வீரசிங்கவின் கீழ் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
யாழ். பள்ளிவசலில் மீட்கப்பட்டுள்ள இராணுவ சீருடை 
யாழ். அல்லைப்பிட்டி பகுதியில்  உள்ள பள்ளிவாசலில் இருந்து இராணுவத்தினர் பயன்படுத்தும் ஜகட் ஒன்றும் கொமோண்டோ படையினர் பயன்படுத்தும் ஒரு வகை கவசமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்து ரீ 56 ரக துப்பாக்கிக்கு பயன்படும் இரு தோட்டகளும் மீட்கப்பட்டுள்ளன.
கலபிந்துனுவெவ சோதனை :
கலன்பிந்துனுவெவ பகுதியில் பொலிசார் முன்னெடுத்த சோதனையில் சிப்புக் குளம் பகுதியில் ஒருவர் 3 மீட்டர் நீளமான வாளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.
வாரியபொலவில் சிக்கிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்கள்
வாரியபொல - பண்டார கொஸ்வத்த பகுதியில்  பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த சோதனைகளில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நல்வர் தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்கள் என பொலிசார் கூறினர்.  
150 இற்கும் மேற்பட்ட பொலிஸ், இராணுவத்தினர்  வீடுகள் பள்ளிவாசல்களை இதன்போது சோதனை செய்துள்ளனர். இதன்போது அங்கிருந்து  கடும்போக்கு கருத்துக்கள் அடங்கிய இருவெட்டுக்கள்,  கையேடுகள், மடிக்கணினி, வாள் கத்தி என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது பயங்கரவாத தாக்குதலில் தற்கொலை தரைகள் பயன்படுத்திய வேன் கெக்கிராவையில் சிக்கியது
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அங்கு பாதுகாப்பு தரப்பினரை இலக்குவைத்து தாக்குதல் நடத்திய பின்னர் குண்டுகளை வெடிக்க வைத்து தர்கொலை தககுதல் நடத்தினர். 
இவ்வாரு அங்கு பதுங்கியிருந்ததாக கருதப்படும்,  உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சகோதரர்களான ரில்வான், சைனி உள்ளிட்டவர்கள் அவ்வீட்டுக்கு செல்ல பயன்படுத்திய வேன் பாதுகாப்பு தரப்பினரால் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த வேனில் பயங்கரவாதிகள் அவ்வீட்டுக்கு வெடிபொருட்களுடன் வந்ததாக பொலிசார் சந்தேகிக்கும் நிலையில், அவ்வேனை கெக்கிராவை - மருதன்கடவல இஹல புளியன்குளம் பகுதியில் வைத்து கைப்பற்றினர். 250 - 5680 எனும் குறித்த வேனின் சாரதியாக கடமையாற்றிய அபுசாலி நசார் என்பவரையும் இதன்போது கெக்கிராவை பொலிசார் கைதுசெய்தனர்.
கல்முனை பொலிஸ் அத்தியட்சருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  அந்த தகவல் கெக்கிராவ பொலிஸ் பொறுப்பதிகரைக்கு கொடுக்கப்பட்டு அதனூடாக இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது.
கெக்கிராவை பகுதியில் உள்ள மெளலவி ஒருவர் தனக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமையவே அவர்களை சாய்ந்தமருதுக்கு அழைத்து சென்றதாக சாரதி பொலிசாரிடம் கூறியுள்ள நிலையில் குறித்த மெளலவியைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சஹ்ரானின் நெருங்கிய சக கைது
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரானின் மிக நெருங்கிய சக ஒருவர் கல்முனை - மருதமுனை அஷ்ரப் வீதி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.  
சஹ்ரானுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என கருதப்படும் குறித்த சந்தேக நபரிடம் இருந்து சந்தேகத்துக்கிடமான 3 புத்தகங்கள்,  சிம் அட்டை, தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் ஐ.எஸ். ஐ.எஸ். ஆதரவாளர் கைது
அம்பாறையில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதரவாளராக செயற்பட்டதாக நம்பப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ். தலைவர்கள், தொடர் குண்டுவெடிப்பு காணொளிகள் என்பவற்றை பலருக்கு தொலைபேசியில் பதிவேற்றிக் கொடுத்துள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
வவுனியா, மன்னார் சுற்றிவளைப்புக்கள்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தககுதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் வடக்கில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், வடக்கில் தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி வவுனிய மாவட்டத்தில் இராணுவம் முன்னெடுத்த சோதனைகளில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மன்னாரில் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைதான சஹ்ரானின் ஊடக செயலர்
உயிர்த்த ஞாயிறு  தற்கொலை தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான மொஹம்மட் சஹ்ரானின் ஊடக செயலராக செயற்பட்ட ஒருவரை மதவாச்சி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  மதவாச்சி, தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த அப்துல் லதீப் மொஹம்மட் என்பவரையே இவ்வாறு கைதுசெய்துள்ள மதவாச்சி பொலிசார், அவரை அனுராதபுரம் நீதிவான்  ஜானக பிரசன்ன சமரசிங்க முன் ஆஜர்செய்து 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
6 பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபரின் மனைவி 7 ஆவது பிரசவத்துக்காக காத்திருந்தபோது, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் காத்தான்குடி தேசிய தெளஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டாளராக இருந்துள்ளதாகவும் பொலிசார் கூறினர்.  
மின்சார தொழில் நுட்ப உத்தியோகத்தரான குறித்த சந்தேக நபர்,  மொஹம்மட் சஹ்ரானின் ஊடக செயலராக செயற்பட்டுள்ளமை  ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
இந் நிலையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடமேல், வட மத்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன, அனுராதபுரம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் செனரத் பிரதாப் சந்துன்கஹவல,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் திலின ஹேவா பத்திரன அகியோரின் மேற்பார்வை ஆலோசனையின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
கிழக்கு ஆளுநர் அலுவலக சேவையாளர்கள் கைது
இதைடையே காத்தான்குடி - ரெலிகொம் வீதியில் விஷேட சுற்றிவளைப்பு இடம்பெற்றது. இராணுவத்தினருடன் இணைந்து  முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின்போது,  அப் பகுதியில் இருந்த அரசியல் அலுவலகம் ஒன்று சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்து ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 48 கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அங்கிருந்த கிழக்கு ஆளுநர் அலுவலகத்தின் கீழ் சேவையாற்றிய என்.எஹ்.எம். கரீம், எம்.ரி. நசார் என அறியப்படும் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
அவர்களிடம் கிழக்கு ஆளுநர் அலுவலக அடையாள அட்டையும் இருந்துள்ளது.
சாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கு வீடு வாடகைக்கு கொடுத்தவர் கைது
சாய்ந்தமருது வொலிவேரியன் குடியிருப்பு பகுதியில் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற வீட்டை பயங்கரவாதிகளுக்கு  வாடகைக்கு கொடுத்த நபரை அம்பாறை பொலிசார் கைது செய்து 72 மணிநேரம் தடுப்புக் காவலில் தடுத்து விசாரித்து வருகின்றனர்.  
அப்துல் மஜீத் ஆதம் லெப்பை என்பவரையே பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தெளஹீத் ஜமாத்தின் முக்கியஸ்தர்கள் மூவரின் கைது
தேசிய தெளஹீத் ஜமாத்தின் முக்கிய உறுப்பினர்கள் மூவர் மிரிஹானை விஷேட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மிக முக்கிய நபர்களாக கருதி தேடப்பட்டு வந்த கல்கிசை,  இரத்மலானை மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 
இவர்களிடமிருந்து 4 மடிக் கணினிகள், 5 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரு தெளஹீத் ஜமாத்தினரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கொட்டாஞ்சேனை – மெசஞ்சர் வீதியில் கைதுசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டு சந்தேக நபர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார நெலும்தெனிய முன்னிலையில், சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியதையடுத்து தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 2 ஆம் திகதி வரை சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து இருவெட்டுகளும், மடிக்கணினியும், கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.எப்.எம்.பஸீர் 

Sifnas Hamy

About Sifnas Hamy -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :
......