தற்போது இலங்கை ஜனாதிபதியால் புர்கா அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக இனவாதிகள் கழற்ற முயற்சித்த புர்காவை, தற்போதுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை சாதகமாக பயன்படுத்தி இலகுவாக கழற்றிவிட்டார்கள். அண்மையில் திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் ஹபாயாவை கழற்ற தமிழினவாதம் தலைகீழாக நின்று போர்க்கொடி தூக்கியிருந்தது. அவ்வாறானவர்களுக்கு இச் செய்தி இனிப்பாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. இன்று ஹபாயா கழற்றப்படாவிட்டாலும், புர்கா தடையினூடாக ஹபாயாவும் வெகு விரைவில் கழற்றப்படுமெனும், அவர்கள் மிக நீண்டகாலமாக எதிர்பார்த்த இனிப்பான செய்தியை பெற்றிருப்பார்கள்.
இம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, விழிப்புணர்வு என்ற வகையில் கடைகளிலும், வாகனங்களிலும் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள், இலங்கை அரசு ஹபாயா, பர்தா போன்றவற்றையும் தடைசெய்துள்ளது என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அமையப்பெற்றுள்ளன. ஒரு புர்கா அணிந்த பெண்ணின் புகைப்படத்திற்கு குரொஸ் அடையாளம் (×) போட்டுக்காட்டியுள்ளார் (புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.). இவ்வாறு ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் புர்காவுடன் சேர்த்து பர்தா, ஹபாயா போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தையே வழங்குகிறது.
இவ்வாறான புகைப்படங்களை ஒட்டுவதே, இது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே! அந்த விழிப்புணர்வே தவறாக அமைந்தால், அது வேறு வகையான விளைவுகளை ஏற்படுத்தும். சமூக வலைத்தளங்களுடன் தொடர்பற்றவர்கள், குறித்த ஸ்டிக்கர்கள் வழங்கும் தவறான பொருளை உள்ளத்தில் பதித்து கொள்வார்கள். அதன்படி அவர்கள் செயற்பட்டால்?
இவ்வாறு ஒட்டப்படும் ஸ்டிக்கர்களில் ஹபாயும் தடை என்பது போன்றும் காட்டப்படுவதால், ஹபாய் மீதான வெறுப்பு, உளவியல் ரீதியாக மக்கள் உள்ளங்களில் விதைக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு விடயம் பிழையானதென்பதை சுட்டிக்காட்டும் விழிப்புணர்வு படங்களை, பதாதைகளை அடிக்கடி காணும் போது, தங்களை அறியாமலேயே அது தொடர்பான வெறுப்பு உள்ளத்தில் பதிக்கப்பட்டுவிடும். சில வேளை, இவ் விடயத்தை மையமாக கொண்டும் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படலாம்.
தற்போது ஜனாதிபதியால் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை மாத்திரம் தடை செய்யும் ஒரு சட்டமல்ல. முகத்தையும், காதையும் மறைக்கக் கூடாது என கூறும் இலங்கை மக்கள் அனைவருக்குமான பொதுவான சட்டம். சட்டம் இவ்வாறிருக்க, முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவது மாத்திரமே தடை போன்ற முஸ்லிம் பெண்களை மையப்படுத்திய விழிப்புணர்வு புகைப்படங்கள் பகிரப்படுவதன் நோக்கம் தான் என்ன?
குறித்த சட்ட விடயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த சிந்திப்பவர்கள், இலங்கை அரசு முகத்தையும், காதையும் மறைப்பதை தடை செய்துள்ளது எனும் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தின் உரிய பொருளை வெளிப்படுத்தும் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவே பொருத்தமானது. இதில் முஸ்லிம் பெண்களை குறிக்கும் விழிப்புணர்வு சுட்டிக்காட்டல்கள் அவசியமற்றது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.