தற்பொழுது பயன்படுத்தப்படும் பாரம்பரிய வீதி மின் விளக்குகளுக்குப் பதிலாக, வீதி வெளிச்சத்திற்காக செயற்திறன் மிக்க எல்ஈடி வீதி மின் குமிழ்களைப் பொருத்த உள்ளக, பொது நிர்வாக அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அமைச்சர் வஜிர அபேவர்தன இது தொடர்பாக சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை ஒன்று, கொரிய ரெலிகொம் நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரை தொடர்பில் மதிப்பீடு செய்து, இவ் விடயங்களைச் சமர்ப்பிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்று அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் மூலம் பெறக்கூடிய நன்மைகளைப் போன்று, இந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தி கொழும்பு நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் பாதுகாப்பு மற்றும் கழிவு முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுப்பதற்கு சீசீடீவீ புகைப்படக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கு முடிந்தமை, பொதுமக்களால் பயன்படுத்தக் கூடிய வைபை (WIFI) வசதிகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்தமை போன்ற பயன்கள் தொடர்பில், குறித்த அதிகாரிகள் குழுவினால் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், வீதி வெளிச்சத்திற்காகச் செயற்திறன் மிக்க எல்ஈடி வீதி மின் குமிழ்களைப் பொருத்துவதற்கான இத்திட்டத்தை, கொரிய ரெலிகொம் நிறுவனத்திற்கு வழங்கி நடைமுறைப்படுத்தவதற்கும் உள்ளக, பொது நிர்வாக அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஐ. ஏ. காதிர் கான்)