நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கி ழமை (18) தனது 73 ஆவது பிறந்ததினத்தைக் தனது குடும்ப உறவினர்களுடன் சந்தோசமாகக் கொண்டாடினார்.
அவரின் 73ஆவது பிறந்ததினம் அவர் பிறந்த நாளான ஞாயிற்றுக்கிழமையே இத்தினம் வருவது மகிழ்ச்சி தருகின்ற விடயமாக இருக்கின்றது.
அவரின் வாழ்க்கை குறிப்பைச் சற்று புரட்டிப் பார்த்தால்...
நாட்டின் அதிமேதகு பிரதமர், பேர்சி மகேந்திரா ராஜபக்ஷ எனும் இயற்பெயரைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தென் மாகாண அம்பாந்தோட்டையில் உள்ள வீரக்கெட்டிய என்ற ஊரில் புகழ்பெற்ற அரசியல் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தார்.
தென் மாகாணம், காலி மாவட்டம் - காலி நகரில் அமைந்துள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைகளில் ஒன்றான ரிச்மண்ட் கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியைக் கற்ற இவர், பின்னர் கொழும்பு நாளந்தா கல்லூரியிலும், தேர்ஸ்டன் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பயின்றார்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றிய இவர், பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, 1977 நவம்பரில் சட்டவறிஞராகி, தங்காலையில் சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 1970 மே 27 ஆம் திகதி பெலியத்தை தொகுதி மூலமாக அரசியலுக்குள் நுழைந்து, முதன் முதலாக பாராளுமன்றத்துக்குத் தெரிவாகி, 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும்வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
ஜனாதிபதியாக தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை அம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டம் ஊடாக 2005 நவம்பர் 19 இல் தொடங்கி, 2010 ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவில் இரண்டாம் தடவையாக 2010 ஜனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிக்க முடியாமல் 2015 ஜனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார்.
பல போராட்டங்களுக்கு மத்தியில் 2015 பாராளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றம் சென்றார். ஆனாலும் இவரது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் இவர் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார்.
இவரது தந்தையாரான டி.ஏ. ராஜபக்ஷ, பண்டாரநாயக்க அரசில் பிரதி சபாநாயகராகவும், தகநாயக்காவின் அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இவரது மாமனாரான டி.எம். ராஜபக்ஷ அம்பாந்தோட்டை தொகுதியின் அரசாங்க சபை உறுப்பினராக 1930 களில் பதவி வகித்து வந்தவர்.
சிறுவர் உளவியலாளரும், கல்வியியாளருமான சிரந்தி விக்கிரமசிங்கவை 1983 இல் கரம் பிடித்தார். இவரது தந்தை இலங்கைக் கடற்படையின் இளைப்பாறிய அதிகாரி. இவர்களுக்கு நாமல், யோசித, ரோகித என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். நாமல் பாராளுமன்ற உறுப்பினராகவும் யோசித இலங்கைக் கடற்படையிலும் பணியாற்றியவர்கள்.
01 மே 1993 இல் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 19 ஆகஸ்ட் 1994 - 1997 வரை டிங்கிரி பண்டா விஜயதுங்கவும் அதன் பிறகு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதியாக இருந்த போது தொழில் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராகவும், 19 ஒக்டோபர் 2000 - 14 செப்டம்பர் 2001 வரை மீன்வளத்துறை அமைச்சராகவும், 6 பெப்ரவரி 2002 - 2 ஏப்ரல் 2004 வரை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த வேளையில் (அப்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க) 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவராகவும், 22 ஏப்ரல் 2004 -- 19 நவம்பர் 2005 வரை நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
19 நவம்பர் 2005 - 15 ஜனவரி 2015 வரை 5 ஆவது இலங்கை சுதந்திரக் கட்சித் தலைவராகவும் 19 நவம்பர் 2005 - 9 ஜனவரி 2015 வரை 6ஆவது இலங்கையின் ஜனாதிபதியாகவும் பதவி ஏற்ற இவர், 19 நவம்பர் 2005 - 8 ஜனவரி 2015 வரை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராகவும், 23 நவம்பர் 2005 - 9 ஜனவரி 2015 வரை நிதி அமைச்சராகவும், 23 ஏப்ரல் 2010 - 8 ஜனவரி 2015 வரை நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சராகவும், 26 ஆகஸ்ட் 2013 - 8 ஜனவரி 2015 வரை சட்டம் மற்றும் ஒழுங்காற்றல் அமைச்சராகவும் நாட்டு மக்களுக்குச் சேவை செய்துள்ளார்.
1 ஆகஸ்ட் 2008 - 3 ஆகஸ்ட் 2008 வரை 15 ஆவது சார்க் அமைப்பின் தலைவராகவும், 15 நவம்பர் 2013 - 9 ஜனவரி 2015 பொதுநலவாய அமைப்புகளின் 11ஆவது தலைவராகவும் பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கை சபையின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இவர் மல்வத்தை பீடத்தினால் ‘ஸ்ரீரோகண ஜனரஞ்சக’ என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, எத்தனையோ ஜனாதிபதிகள், பிரதமர்கள் நாட்டை ஆட்சி செய்த போதிலும் யாருமே செய்யாத, 30 வருடமாக நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, வரலாறு பேசும் அளவுக்கு ராஜ தலைவன் என்ற நாமத்தை பதித்தவர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்ற சபாநாயகராகப் பணியாற்றியவர். மற்ற சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷ இலங்கை படைத்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய இவர், கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றினார்.
மற்ற சகோதரர் பஷில் ராஜபக்ஷ கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தவர்.
மஹிந்த ராஜபக்ஷ, 1994 - 2004 வரை மக்கள் கூட்டணியிலும், 2004 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியிலும், 2016 இலங்கை பொதுஜன முன்னணி மூலமாகவும் தேர்தலில் போட்டியிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் 2018 ஒக்டோபர் 2 6 முதல் இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமனம் செய்ததையடுத்து, இவர், தற்போது பிரதமராகப் பதவி வகிக்கின்றார்.
நாமும் எமது வாழ்த்துக்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)