கல்விமுறை முற்று முழுதாக இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. படைப்புக்களில் அறிவைத் தேடும்திறன் மனிதருக்கு உண்டு என்பது அங்கே வலியுறுத்தப்படுகின்றது. திருக்குர்ஆனை வாசித்தலும் விளங்குதலும் அதற்கு அமைவாக வாழ்தலும் இஸ்லாமியக் கல்வியில் ஆழ்ந்து வலியுறுத்தப்படுகின்றன. வாழ்க்கைக்கும் இஸ்லாம் மார்க்க வழிக்கும் பயன்படாத கல்வியைக் கற்றல் பயனற்ற செயற்பாடாகக் கூறப்படுகின்றது. இஸ்லாமும் கல்வியும் சீரான வாழ்க்கையும் ஒன்றிணைந்து ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
ஆரம்பக்கல்வி பள்ளிவாசல்களுடன் இணைக்கப்பட்டிருந்தது. கல்விச் செயற்பாடு குர்ஆனுடன் ஆரம்பிப்பதால் கற்கும் இடம் புனிதமாயிருக்க வேண்டுமெனக் கொள்ளப்பட்டது. ஆரம்பப் பாடசாலைகள் “மக்தப்” என அழைக்கப்பட்டன. குர்ஆன் ஓதுதலும், எழுத்துக்கற்றலும், இஸ்லாமியர்களது சமயநெறி முறைகளைத் தவறாது கடைப் பிடித்து ஒழுக வேண்டிய நல்லாற்றுப்படுத்தலும் அடிப்படைக் கணிதமும் ஆரம்பப் பாடசாலைக் கலைத்திட்டத்திலே சிறப்புப் பெற்றிருந்தன. இஸ்லாமி யர்களுக்குரிய அடிப்படையான அறிவையும் திறன்களையும் வழங்கும் நிறுவனமாக "மக்தப்" ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மாணவரின் வரவு ஒழுங்கும் அங்கே கண்காணிக்கப்பட்டது. "மக்தப்" வழங்கிய அறிவுத்தளம் இஸ்லாம் தழுவிய மேற்கல்வியைத் தொடர்வதற்குப் போதுமானதாக அமைந்தது. பள்ளிவாசலுடன் தொடர்புடையதாக மக்தப் இருந்தமை "மக்தப்" ஒழுங்கமைப்புக்குச் சிறப்பைக் கொடுத்தது.
இஸ்லாம் மத அடிப்படையில் மேற்படிப்பை வழங்கும் நிறுவனங்களாக "மத்ரசாக்கள்" அமைந்தன. இதன் கலைத்திட்டத்தில், குர்ஆனை விரிவாக விளங்கிக்கொள்ளல் இஸ்லாமிய சட்டங்கள், நாயக வாக்கியங்கள், இலக்கணம், இலக்கியம், தருக்கம், சமய மெய்யியல் முதலியவை கற்பிக்கப்பட்டன.
பெரும்பாலும் வணிகநோக்குடன் இலங்கைக்கு வந்த இஸ்லாமியர் இந்நாட்டின் நகரம் மற்றும் கிராமம் என்றவாறு விரவிப்பரந்திருந்தனர். தாம் வாழுமிடமெங்கும் வழிபாட்டுக்குரிய பள்ளிகளையும் அவற்றோடிணைந்த நிலையங்களையும் ஒழுங்கமைத்தனர்.
தமது சூழலில் உள்ள ஏனைய மக்களுடன் இசைந்து வாழும் திறனுடையவர்களாயிருந்த வேளை தமது சமய மரபுகளை வழுவாது கடைப்பிடித்து வந்தனர். ஐரோப்பியர் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே முஸ்லீம் வர்த்தகர் இந்நாட்டுடன் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர். பக்தாத் நகரையும் இலங்கையையும் அவர்கள் வர்த்தகத் தொடர்புகளால் இணைத்தனர். இலங்கை அரசர்களுக்கு வேண்டிய அயல்நாட்டுப் பொருள்களை அவர்கள் கடல்வழியாக எடுத்து வந்து வழங்கியமையால் அரசர்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தனர். இதனால் வர்த்தகம் தொடர்பான அறிகையை (Cognition) இலங்கை மக்களுக்கு வழங்குவதில் இஸ்லாமியரின் பங்கு சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றது.
இஸ்லாமியர்களின் பரவலோடு அறபுமொழியின் செல்வாக்கு இலங்கையிலே இடம்பெறலாயிற்று. ஒப்பீட்டளவில் சிங்கள மொழியைக் காட்டிலும் தமிழ்மொழியில் அறபுமொழியின் செல்வாக்குகள் கூடுதலாக இடம்பெற்றன.
"முஸ்லிம் தமிழ்” என்ற கிளைமொழி வடிவம் இஸ்லாமியர் தனி இனக்குழுமமாக வளர்ந்தமையுடன் இணைந்த தோற்றப்பாடாயிற்று. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்களிடத்து முஸ்லிம் தமிழ் விரைந்து வளர்ந்தது. முஸ்லிம் தமிழ் என்பது எழுத்து நிலையில் தமிழ் வரிவிலும் எழுதப்பட்டது. அதேவேளை, அறபு வரிவடிவில் எழுதப்பட்ட முஸ்லிம் தமிழ் "அறபுத் தமிழ்” என அழைக்கப்படலாயிற்று.
இலங்கையில் இஸ்லாமியர்களின் பரவலோடும் அவர்களிடத்து உயர்ச்சிபெறத் தொடங்கிய தமிழ்க்கல்வி வளர்ச்சியோடும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் தோற்றம் பெறலாயின. தமிழ் யாப்பு மரபைப் பின்பற்றி இஸ்லாத்தின் இயல்புகளை விளக்கும் செய்யுள் ஆக்கங்கள் தோற்றம்பெற்றன. நாட்டார் மரபுகளை அடியொற்றிய செய்யுள்களும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களிலே இடம்பெற்றன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இஸ்லாம் மதக்கல்வியோடு புதிய வகைப் பாடசாலைகளின் தேவையையும் இஸ்லாமியர்கள் அறிந்துகொண்டமையால் 1891ஆம் ஆண்டு கண்டி முஸ்லிம் ஆண்கள் பாடசாலை தோற்றம் பெற்றது. அதனைத் தொடர்ந்து முஸ்லிம் பாடசாலைகள் வளர்ச்சியுறலாயின.
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் உரைநடை ஆக்கங்களும் வளர்ச்சி பெறத்தொடங்கின. இவற்றால் தமிழ்மொழி பன்மை இயல்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்தது.
1972ஆம் ஆண்டுக் கல்விச்சீர்திருத்தங்களைத் தொடர்ந்து தமிழ்ப் பாடநூல்களில் இஸ்லாமிய பண்பாடு தொடர்பான ஆக்கங்கள் இடம்பெற்று வருவதால், ஏனைய மாணவர்களும் அவற்றை அறிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது.
அத்துடன், அவர்கள் பிற தனியார் பாடசாலைகளிலும் அரசாங்கப் பாடசாலைகளிலும் கற்று தமது கல்வியை மேம்படுத்தி வரு கின்றவேளை தமது சமயக் கல்வியை இணைத்துக் கற்று வருகின்றனர். கன்னங்கராவின் கல்விச்சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து முஸ்லிம் ஆண்களுக்கும் பெண்களுக்குமென தனித்தனியாக ஆசிரியர் கலாசாலைகள் தோற்றம் பெற்றமை இஸ்லாம் மதத்தின் தனித்துவத்தை மீளவலியுறுத்துவதாக அமைந்தது.
தமது சமய விழுமியங்களை இறுகப்பற்றி நின்றவாறே இஸ்லாமியர்கள் புதிய கல்விச் செயற்பாடுகளிற் பங்குகொண்டு வருகின்றனர்.
- ஜெயராசா, சபா, (2008) இலங்கையின் கல்வி வரலாறு, கொழும்பு, சேமமடு பதிப்பகம்.