கண்டித் தாக்குதல் என்பது அடிப்படைவாதிகளால் திட்டமிடப்பட்ட ஒன்று எனக் கூறியுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் மத்தும பண்டார, அந்த அடிப்படைவாதிகள் யார் எனச் சொல்லாமல் வெறுமனே மொட்டையாகக் கூறியிருப்பதன் மூலம், அமைச்சர் முஸ்லிம்களைச் சமாளித்து சிங்களவர்களைத் திருப்திப்படுத்த முனைந்துள்ளார் என, உலமாக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இது பற்றி உலமாக் கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் கபூரி கூறியுள்ளதாவது,
அண்மையில் முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் உலமா சபை என்பன இவரைச் சந்தித்த போதே இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார். இங்கு அமைச்சர் சிங்கள, பௌத்த அடிப்படைவாதிகளே இக்கலவரத்தைத் திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளனர் என்ற பகிரங்க உண்மையைச் சொல்லாமல், வெறுமனே அடிப்படைவாதிகள் என சொல்லியுள்ளமை, உண்மையைச் சொல்ல மறுக்கும் இவரது சராசரி அரசியலை வெளிக்காட்டியுள்ளது. அவரது இக்கருத்தைக் கேட்டு அதற்கு சரியான பதிலை வழங்காமல் தலையாட்டிவிட்டு முஸ்லிம் கவுன்ஸிலும் உலமா சபையும் வந்தார்களா என்பது தெரியவில்லை. அவ்வாறு வந்திருந்தால், அது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
நாட்டில் ஒவ்வொருவரும் தத்தமக்கு வாசியாக அடிப்படைவாதம், தீவிரவாதம் என சொல்லிக்கொள்கிறார்கள். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பிழையான அடிப்படை வாதமோ, தீவிரவாதமோ இல்லை.
இன்று வரை இலங்கை முஸ்லிம்கள் எந்த சமூகத்துக்கும் எதிராக தாமாகவே கலவரத்தை உருவாக்கியதாக ஒரு நிகழ்வு கூட பதிவாகவில்லை. இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று வரை தாக்கப்படும் சமூகமாக உள்ளதே தவிர, சுயமாகக் கூட்டாக வேறு இன அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதில்லை. கடந்த கண்டி சிங்கள பௌத்த பயங்கரவாதத் தாக்குதலின் போது, ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் முஸ்லிம்கள் இழந்துள்ளார்களே தவிர, ஒரு கோடி ரூபா சொத்தையாவது முஸ்லிம்களால் ஒரு சிங்கள வர்த்தகராவது இழந்ததாக பதிவுகள் இல்லை.
உண்மைகள் இப்படியிருக்கும் போது, பொறுப்பு வாய்ந்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் வெறுமனே அடிப்படைவாதிகள் என சொல்வது ஒழுங்கற்ற ஒன்றாகும்.
ஆகவே, சட்டம் பாதுகாப்புக்கான அமைச்சர் கண்டி கலவரத்தில் ஈடு பட்ட சிங்கள அடிப்படைவாதிகளைச் சுட்டிக்காட்டாமல் விஷயத்தை திசை திருப்பி, குற்றவாளிகளைத் தப்புவிக்க முயலாமல், சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளே இதனை அரங்கேற்றினர் என்பதையும், அரசின் உதவியின்றி இப்படியொரு பாரிய திட்டமிட்ட கலவரத்தை முன்னெடுக்க முடியாது என்பதையும், பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என, உலமாக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.