அண்மையில் உங்களின் twitter பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் "இஸ்லாமிய பெயர்கொண்ட அடிப்படைவாதிகள், “அராபிய தோற்றப்பாட்டை” நகல் செய்யும் சமீபகால கலாச்சாரத்தை கைவிட்டு, இலங்கை சமூகத்துடன் அடையாளப்படும் வழியை தேடவேண்டும்"

எனும் செய்தியை பார்த்ததும் மிகவும் வேதனை அடைந்தோம். முஸ்லிங்கள் வலிகளாலும் வேதனைகளாலும் இழப்புகளாலும் உணர்வு இழந்து இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் கூறிய கூற்று எரிகிற வீட்டில் என்னை ஊற்றுவது போலவே காணப்படுகிறது.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் எனும் உயர்ந்த பொறுப்புள்ள அமைச்சராக இருந்து கொண்டு இவ்வாறு ஒரு சமூகத்தை பற்றி பேச முடியுமா அமைச்சர் அவர்களே!

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டு இருக்கும் கலவரம் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவ்வாறு அறியவில்லை என்றால் நீங்கள் இருக்கும் அமைச்சு பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் உங்களின் கட்சியையும் தூக்கி எரிந்து விட்டு குடும்பத்தோடு சந்தோசமாக காலத்தை கழியுங்கள்.

இப்போது நீங்களே உங்களை ஒரு சுயநல அரசியல்வாதி எனவும் இனவாதி எனவும் வெளிக்காட்டி இருக்கிறீர்கள். இனி ஒரு போதும் முஸ்லிங்கள் உங்களை ஏற்கப்போவதில்லை. ஒரு சமூகம் உங்களின் மீது வைத்து இருந்த நம்பிக்கையை ஒரு பதிவு போட்டு அழித்து விட்டீர்கள். உள்ளத்தில் இருப்பது என்றோ ஒரு நாள் வெளிவந்துதான் தீரும். அதுவே இங்கு நடந்து இருக்கிறது.

சிங்கள பேரினவாதிகளினால் முஸ்லிங்கள் தாக்கப்பட்டு, முஸ்லிங்களின் புனிதஸ்தலங்கள் அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும், முஸ்லிங்களுக்கு சொந்தமான வீடுகளும் கடைகளும் எரிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் இருப்பதையும் பற்றி உங்களால் பேச முடியவில்லையா?

சிங்கள பேரினவாதிகளினால் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அம்பாறை முஸ்லிங்களில் இருந்து ஆரம்பித்த வன்முறை கண்டி மாவட்ட முழு முஸ்லிம் ஊர்களும் பாதிப்படைந்து இருக்கிறது. நாடு முழுவதும் சிங்கள பேரினவாதம் தலைவிரித்து ஆடுகிறது அதை பற்றி உங்களால் பேசமுடியவில்லையா?

முஸ்லிங்கள் ஒன்றும் இன்னொரு நாட்டு பிரஜையில்லை. நாங்கள் இலங்கை தான் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமும் எங்களுக்கில்லை.

தருணம் பார்த்து அடிக்கும் கேவலமான சந்தர்ப்பவாதிகளான உங்களை போன்றவர்களை பார்த்து இலங்கை குடிமகன் என்ற வகையில் வெட்கப்படுகிறேன்.

முஸ்லிங்கள் பற்றி பேசும் நீங்கள் தமிழர்கள், சிங்களவர்கள் என எல்லோரையும் சேர்த்து பேசுங்கள். ஒரு இனத்தை மட்டும் சாடி பேசும் உங்களின் வன்மமான அரசியலின் உள்நோக்கம் என்ன? ஒரு சமூகத்தை கேள்விக்குட்படுத்தி அந்த முழு சமூகத்தையும் தலை குனிய வைக்கும் உங்களின் அசிங்கமான அரசியலை வன்மையாக கண்டிக்கிறோம்.

சந்தர்ப்பம் பாராது இப்படி ஒரு சமூகத்தை மட்டும் பேசி பழிவாங்கும் நீங்கள் "தேசிய சகவாழ்வு" ஐ இந்நாட்டில் எப்படி செய்யப்போகிறீர்கள். பொருத்தமில்லாத அமைச்சை பாரமெடுத்து இருக்கிறீர்கள் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

மனாப் அஹமத் றிசாத்