NFGGக்கு ஷீயாக்களோடு நெருங்கிய தொடர்புகள் உண்டு என்றதும் பலர் அதை ஆச்சரியமாகப் பார்ப்பதை நாம் உணரலாம். அதேபோன்று அவர்களுக்கு அந்த ஷீயாக்களுடனான தொடர்பு எவ்வாறு ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? அதனால் அவர்களுக்கு என்ன லாபம் கிடைத்தது? இதை எவ்வாறு நாம் ஆதாரத்தோடும் வரலாற்று சான்றோடும் ஏற்பது? என்பன போன்ற கேள்விகள் ஏற்படலாம். அதனுடைய உண்மை நிலையென்ன என்பதை பல வழிகளில் கண்டுகொள்ளவும் நிரூபிக்கவும் முடியும். அதற்கு முன்னர் இந்த NFGGயுடைய அரசியல் முன்னோடிகள் யாரென்பதையும் அந்த முன்னோடிகளுடைய வரலாறு எத்தகையதென்பதையும் நாம் அறிந்துணரவேண்டியது அவசியமானது.
இலங்கையில் ஷீயாக்களை நீரூற்றிப், பசளையிட்டு, வளர்த்து, வாழவைக்கின்ற ஒரு இயக்கம்தான் ஜமாஅத்தே இஸ்லாமியாகும். இந்த NFGG என்பது ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தினுடைய 'நகல் கட்சி' என்றால் அது மிகையில்லை. ஜமாஅத்தே இஸ்லாமியுடைய தஃவாப் பிரச்சாரம் வலுவிழந்து போய் அதனுடைய சுயரூபம் சந்திசிரிக்க ஆரம்பித்துவிட்ட இந்த காலகட்டத்தில்தான் அவ்வியக்கத்தையும் அதனுடைய கொள்கைகளையும் அரசியல் அதிகாரத்துடன் இலங்கை முழுவதும் வாழவைப்பதற்காக இந்த NFGG பாடுபடுகின்றது.
இது ஜமாஅத்தே இஸ்லாமிக்கும் NFGGக்கும் இடையில் உத்தியோகபூர்வமாகக் கைச்சாத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தம் என்பதை ஊர்ஜிதமாக வெளிப்படுத்துவதற்கு நமக்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால் NFGGயுடைய வளர்ச்சியானது நிச்சயமாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியையும் அதன் கொள்கைகளையும் வளர்ச்சியடையச் செய்யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஏனெனில் NFGGயுடைய அரசியல் வடிவமும் மார்க்கரீதியான நிலைப்பாடும் எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் முழுக்க முழுக்க ஜமாஅத்தே இஸ்லாமியின் வடிவமேயாகும். மேலும் NFGGயுடைய அரசியல் பிரச்சாரமானது மிகவும் அதிகமாக செல்வாக்குச் செலுத்துவதும் கவர்வதும் ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆதரவாளர்களைத்தான் என்றால் அதிலும் மிகையில்லை.
இதை நாம் அறிந்துகொள்வதற்கு அதிகதூரம் செலவேண்டிய அவசியம் இல்லை. NFGGயின் சார்பில் TNAயோடு இணைந்து வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு தேசியப்பட்டியலில் உறுப்புரிமை பெற்று கடைசியில் NFGGயால் TNAக்கே அன்புப் பரிசாக வழங்கப்பட்ட அய்யூப் அஸ்மின் என்பவர் ஒரு நளீமி மட்டுமன்றி கடந்த காலங்களில் ஜமாஅத்தே இஸ்லாமியின் தாயியாகவும் இருந்த ஒருவர். அந்த ஜமாஅத்தே இஸ்லாமியின் மார்க்கரீதியான நிலைப்பாடுகளோடு இந்த NFGGயின் நிலைப்பாடும் ஒத்துப்போன காரணத்தினால் அவர் NFGGயோடு இணைந்துகொண்டார்.
அதபோல NFGGயின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் ஜமாஅத்தே இஸ்லாமியின் தாயிக்களில் ஒருவராக இருந்தவர். அவரும் இக்கட்சியோடு இணைந்துகொண்டதற்கு மேற்சொன்னவைகளே காரணமாகவும் அமைந்தன. இந்த நஜா முஹம்மத் லண்டனில் இருந்தபோது அழுத்கம வன்முறை இடம்பெற்றது. அந்த வன்முறையைத் தோற்றுவித்த போதுபலசேனா அமைப்புக்கு எதிராக லண்டனில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை முன்னின்று தடுத்து நிறுத்தியவர்களில் இந்த நஜா முஹம்மத் முக்கியமான ஒருவர். காரணம், பொதுபல சேனாவுக்கு எதிராக உள்நாட்டிலோ வெளிநாடுகளிலோ எந்தவொரு ஆர்ப்பாட்டமும் முன்னெடுப்பதில்லை என்று இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அப்போது தீர்மானம் எடுத்திருந்தது.
இந்த உள்ளூராட்சித் தேர்தலில் கூட அக்கரைப்பற்றில் NFGG சார்பில் போட்டியிடுகின்ற ஸிராஜ் மஷூருக்கு ஆதரவளிப்பதற்காக முன்வந்திருப்பவர்களில் 99% வீதமானவர்கள் ஜமாஅத்தே இஸ்லாமியின் தாயிக்களும் ஆதரவாளர்களுமே. அக்கரைப்பற்றுப் பகுதியிலுள்ள நபர்களைத் தொடர்புகொண்டு இதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
NFGGக்கும் ஜமாஅத்தே இஸ்லாமிக்கும் தொடர்பில்லை என்று இக்கட்டுரையை வாசிக்கின்ற ஜமாஅத்தே இஸ்லாமிசார் முகாம்களால் இப்போதைக்கு இலகுவாக மறுத்துரைக்க முடியும். ஆனால் ஜமாஅத்தே இஸ்லாமி முகாம் சார்ந்தவர்களும் அந்த சிந்தனைப்போக்கை கொண்டவர்களுமே NFGGயின் அடிமட்டம் முதல் உயர்மட்டம் வரை ஆதரவாளர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருக்கின்றார்கள் என்ற உண்மையை யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
இது தவிர ஜமாஅத்தே இஸ்லாமியின் அத்திவாரங்களாக அதிகம் காணப்படுபவர்கள் நளீமிக்களே. நளீமிக்களுக்கும் ஷீயாக்களுக்கும் இடையிலுள்ள உள்வீட்டு உறவின் உண்மைநிலையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறியதொரு பதிவின் மூலமாக எடுத்துக்கூறியிருந்தேன். அதில் AC. அகார் முஹம்மத் நளீமி, றஊப் ஸெய்ன் நளீமி போன்றவர்களால் அணிந்துரை எழுதப்பட்ட புத்தகங்களின் பட்டியலையும் வெளியிட்டிருந்தேன். இலங்கையில் ஷீயாக்களையும் முஸ்லிம்களாக அங்கீகரித்து அடைகாத்ததில் கணிசமான நளீமிக்களின் வகிபாகம் மிக முக்கியமானது. அதனடிப்படையில்தான் NFGGயுடைய இரண்டு நளீமிக்களின் அங்கீகாரத்தில் குறித்த 'அந்த ஷீயா ஆசிரியரும்' இந்த NFGGக்குள் பலவருடகாலம் பணியாற்றினார்.
அப்பேர்ப்பட்ட நளீமிகளால்தான் இந்த NFGG கட்சியும் வழிநடாத்தப்படுகின்றது. NFGGயின் தவிசாளர் அப்துர் றஹ்மானால் 1990க்கு முற்பட்ட காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட ISA என்னும் அமைப்பானது அப்போதே உஸ்தாத் மன்சூர் (நளீமி) போன்றவர்களாலேயே வழிநடாத்தப்படுள்ளது. அந்த வகையில் ஜமாஅத்தே இஸ்லாமியின் சிந்தனைப் போக்கைக்கொண்டவர்தான் அப்துர் றஹ்மானும் என்பது அவருடைய சமகால செயற்பாடுகள் கட்டியம் கூறி நிற்கின்றன.
பொதுவாகவே ஜமாஅத்தே இஸ்லாமியினருக்கு வலுவான, ஒற்றை நிலைப்பாடான கொள்கை என்று ஒன்று கிடையாது என்பது நாம் அறிந்த ஒன்றாகும். இஸ்லாத்தில் அடிப்படை அகீதா உள்ளிட்ட எந்தவொரு மஸ்அலாவை எடுத்தாலும் அதை அவர்கள் கருத்தியல்ரீதியான வேறுபாடுகளுக்கு இடம் உண்டென்பதை தங்களுடைய நிலைப்பாடாகக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில்தான் ஷீயாக்களைக்கூட முஸ்லிம்கள் என்று அங்கீகரித்தார்கள்.
அந்த வரிசையில் அந்நிய பெண்களோடு கைலாகு கொடுப்பது, இசை கேட்பது, மரியாதைக்காக மாலை அணிவிப்பது, கரண்டைக்களுக்குக் கீழே ஆடை அணிவது, மங்கள விளக்கேற்றுவது, தாடியை சவரம் செய்வது போன்ற மாற்றுசமயக் கலாச்சாரங்களை நடைமுறைப்படுத்துவது போன்றவற்றையும் சாதாரணமாக அரங்கேற்றுவார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்னால் தவக்குல் கர்மான் இலங்கை வந்தபோது அவர் மங்கள விளக்கேற்றியதை கண்டித்து தௌஹீத் அமைப்புக்கள் அறிக்கைகள் விட்டபோது ஜமாஅத்தே இஸ்லாமி மட்டும் அதை நியாயப்படுத்திய வரலாற்றை யாரும் மறந்திருக்கமாட்டோம்.
அதேபோன்றுதான் இந்த NFGGயினர் கூட கடந்த காலங்களில் சிலைகளுக்கு மாலையிட்டார்கள், மங்கள விளக்கேற்றினார்கள், அஜ்னபிகளோடு கைலாகு கொடுத்தார்கள். ஆனால் அவற்றை தௌஹீத் அமைப்புக்களும் அறிஞர்களும் விமர்சித்தபோது மௌனம் காத்தார்கள். காரணம், அவர்களுடைய மார்க்கரீதியான நிலைப்பாட்டின் பிரகாரம் அவையெல்லாம் ஒரு தவறேயில்லை. அதனால்தான் அது தொடர்பில் அவர்கள் வாய்திறக்கவில்லை. அப்போது மௌனமாக இருந்துவிட்டு இப்போது அவற்றை தவறென்று தேர்தல் மேடைகளில் நின்று சொல்வது தேர்தல்கால தந்திரோபாயம் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை.
எனவேதான் இந்த NFGG என்பது ஜமாஅத்தே இஸ்லாமியின் மறு வடிவம் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆயுதப் போராட்டத்தை நம்பியிருந்த விடுதலைப் புலிகள் அரசியல் நீரோட்டத்திற்காக எவ்வாறு தமிழ் இனவாதக் கட்சிகளை தங்களுடைய ஜனநாயக முகமாகப் பயன்படுத்தினார்களோ அதேபோன்றுதான் ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் முகமாக இந்த NFGG செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த ஜமாஅத்தே இஸ்லாமிக்கும் ஷீயாக்களுக்கும் எந்தளவு தூரம் உறவுகள் இருந்தன, ஷீயாக்களை வாழவைப்பதற்காக ஜமாஅத்தே இஸ்லாமி எந்தளவு பாடுபட்டது என்பதை கடந்த காலங்களில் தௌஹீத் மார்க்க அறிஞர்கள், குறிப்பாக SLTJ தாயிக்களால் அக்குவேர், ஆணிவேராகப் பிரித்துக்காட்டப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இந்த ஜமாத்தே இஸ்லாமியின் பின்புலத்திலிருந்து அரசியலுக்கு வந்திருக்கும் NFGG யின் அரசியல் நகர்வுகள் தனித்துவமான ஒன்றல்ல. அதற்கு முன்னோடிகள் உள்ளனர். அவர்களின் சர்வதேச தாய்க் கட்சியின் பிரபலங்களின் அரசியல் தந்திரங்கள்தான் அவர்களின் இலங்கை அரசியலுக்கும் முன்மாதிரி என்று சொல்ல முடியும். பொதுவாக ஷீஆக்களின் தந்திரோபாயங்களைத்தான் இவர்களின் தாய் ஜமாத்தான இஹ்வான்கள் சர்வதேச அரசியலில் கடைப்பிடித்துவருகின்றனர். அதாவது இவர்களின் அரசியல் அறிக்கைகள் உண்மையான, தூய்மையான இஸ்லாத்தை காப்பாற்றவும், தீய சக்திகளில் இருந்து இந்த உம்மத்தை மீட்டெடுக்கவும்தான் அமைந்ததாக அவர்களது கோஷங்கள் இருக்கும்.
ஆனால் அவர்களின் அரசியல் நகர்வுகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குழிதோண்டி புதைக்கும் செயற்திட்டங்களாகவே இருக்கும். மக்களை இப்படியான வார்த்தை ஜாலங்களில் உள்வாங்க உமருடைய ஆட்சி, இஸ்லாமிய ஆட்சி, சதக்கத்துல் ஜாரியா போன்ற இஸ்லாமிய மார்க்கத்தால் தோய்த்தெடுக்கப்பட்ட கவர்சிகரமான வார்த்தைகளை தேர்வு செய்வர். ஷீஆக்கள் தமது நாட்டின் பெயராக "இஸ்லாமிய குடியரசு" என்றுதான் பெயர் வைத்துள்ளனர். அந்த நாட்டின் ராணுவத்திற்கும் “புரட்சி ராணுவம்” என்று பெயர் வைத்துள்ளனர்.
அதில் இன்னுமொரு பிரிவுதான் “குத்ஸ் மீட்புப் படை”யாகும். ஆனால் உண்மையில் இந்த படைகள் குத்ஸை மீட்பதற்காக இஸ்ரேலுக்கு எதிராகவோ, அமெரிக்காவுக்கு எதிராகவோ எங்கும் போராடவில்லை. மாறாக சிரியாவிலும், ஈராக்கிலும், ஏமனிலும், லெபனானிலும் நமது முஸ்லிம்களை கொலை செய்யவும், கற்பழிக்கவுமே போராடுகிறது என்பதை உலகம் கண்டுகொண்டது.
“இஸ்லாமிய குடியரசு”, “குத்ஸ் படை” என்ற பெயர்களை பார்க்கும் உணர்ச்சி பூர்வமான இளைஞர்கள் இவர்களின் இப்படியான மேலோட்ட கவர்ச்சிகரமான காட்சியமைப்பில் ஏமாறுவது என்பது ஆச்சர்யமில்லை. அதுதான் இப்போது காத்தான்குடியிலும் ஏனைய ஊர்களிலும் வாழ்கின்ற தௌஹீத்வாதிகளுக்கு நடந்துகொண்டிருக்கின்றது.
ஏனெனில் இஹ்வான்களின் அறிஞர்களே தாம் ஈரானின் அரசியலைப் பார்த்து இஸ்லாமிய அரசியல் என்று நம்பி ஏமாந்ததாக ஏற்கனவே சொல்லியும் உள்ளனர். ஹிஸ்புல்லாஹ் என்ற ஷீயா போராட்ட இயக்கத்தையும் இஸ்லாமிய முஜாஹிதீன்களாக நம்பி ஏமாந்ததாக சொல்லியும் உள்ளனர். இந்த நிலைப்பாடுகளை இவர்கள் உளப்பூர்வமாக எடுத்ததாகக் காணமுடியவில்லை என்பதை அவர்களின் தற்போதைய சர்வதேச அரசியல் நகர்வுகள் சாட்சி பகர்கிறன. அவை தனிப்பதிவுகளாக எழுதப்பட வேண்டிய தலைப்பு.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் ஷீஆக்களின் அறிக்கைகள் ஒன்றாக இருக்க நகர்வுகள் அதற்கு எதிர்மாற்றமாகவும் இஸ்லாமிய அடிப்படைகளையும், முஸ்லிம்களையும் குழிதோண்டிப் புதைக்கும் திட்டங்களாகவுமே இருக்கும் என்பதையேயாகும். இந்த அரசியல் திட்டத்தை இஹ்வான்கள் இதுவரை கைவிடவில்லை என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது. ஷீயாக்களின் இந்த “தக்கிய்யா” அரசியல், இந்த முரண்பட்ட ஏமாற்றும் அரசியல் இஹ்வான்களில் அச்சடித்ததுபோல இன்றுவரை ஒட்டிக்கொண்டுதான் உள்ளது.
ஒரு பக்கம் சர்வாதிகார அரசியலை எதிர்ப்பதாகவும், இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் போவதாகவும் மக்களிடம் ஆசைவார்த்தைகளை ஊட்டி மக்களை சம்பாதித்துக் கொள்வர். இன்னுமொரு பக்கம் அதே சர்வாதிகாரியை போற்றிப் புகழ்ந்து அவனது தயவில் அரசியல் லாபங்களை பெற்றுக்கொள்வர்.
இந்த போக்கை முன்னோடியாகக்கொண்டுதான் NFGG இலங்கையிலும் செயற்பட்டது, இன்னும் செயற்பட்டு வருகின்றது. SLMCயை வசைபாடியவர்கள் அந்த SLMCயோடு இணைந்தேனும் தங்களுடைய அரசியல் இலாபத்தை அடையப்பார்த்தார்கள், அதேபோன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடனான ஒப்பந்தங்கள் போன்றவற்றையும் குறிப்பிடலாம்.
இவை எல்லாம் NFGGயின் ஆதரவாளர்களான ஜமாத்தே இஸ்லாமியினரும் நளீமிக்களும் பாடம் கற்றுக்கொள்ளுகின்ற அவர்களின் தாய்க்கட்சியான இஹ்வான்க்ளுடைய சர்வதேச அரசியல் வண்டவாளங்களும், துரோகங்களும் ஆகும். இவர்களின் சொல் ஒன்று செயல் வேறொன்றாக இருக்கும். ஷீயாக்களைப் போல அரசியல் அறிக்கை ஒன்றாக இருக்கும் ஆனால் அரசியல் நகர்வு வேறொன்றாக இருக்கும். இவர்களின் தாய்க் கட்சியான இஹ்வான்களின் அரசியல் அறிக்கைகள் கீழ்வருமாறு பல பரிணாமம் பெற்று வந்துள்ளதை காணமுடியும். “இஸ்லாமிய அரசியல்”, “கிலாபா அரசியல்” “ஊழலுக்கு எதிரான அரசியல்”, சர்வாதிகாரத்தை எதிர்க்கும் நல்லாட்சி”, “இஸ்லாமிய ஜனநாயகம்”, ஜனநாயக ஆட்சி” என்ற நேரத்துக்கு நேரம் மாறுபடும் வார்த்தை ஜாலங்கள், மக்களில் அதிகம் எடுபடும் ஆசை வார்த்தைகள் என்பனவற்றை மூலதனமாக வைத்தே இவர்கள் அரசியல் நகர்கிறது.
NFGG யினரின் தாய்க்கட்சியான இக்வான்களே பல முரண்பாடுகளையும், பொய்யான அறிக்கைகளையும் மூலதனமாக வைத்திருக்கும்போது அவர்களிடமிருந்து அரசியலை கற்றுக்கொண்ட இவர்களிடம் மட்டும் எப்படி அதே மாதிரியான போலி அறிக்கைகளும், சந்தர்ப்பவாத அரசியல் நகர்வுகளும் இல்லாமல் போகும்? குச்சியே கோணலாக இருக்க அதன் நிழல் மட்டும் நேராக இருக்குமா? என்ற யதார்த்தமான கேள்வியுடன் NFGG யின் அரசியல் ஷீஆக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட இக்வானிய “தகியா” அரசியல் என்பதை தெளிவாக காணலாம்.

