கல்முனை பெருங்குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய முறைப்பாட்டின் பிரகாரம்,ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாளுடன் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தாச்சேனை பிரதேசத்தை நபர் ஒருவர் நேற்று கல்முனை கடற்கரைபள்ளி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,கடந்த சனிக்கிழமை கல்முனை கடற்கரைபள்ளி திருவிழாவுக்கு சமூகமளித்திருந்த குறித்த நபரொருவர் கொள்வனவுக்காக ரூபாய் 5000 நாணயத்தாளினை பயன்படுத்திய போது கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த சந்தேக நபர்,பெருங்குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு  கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது குறித்த சந்தேக நபரினை 2018.03.02 ஆம் திகதி வரை தடுப்பு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரினை கல்முனை பெருங்குற்றத் தடுப்பு நிலைய பொறுப்பதிகாரி யோகேஸ்வரன் அருணன் அடங்கிய குழுவினர் விசாரணை செய்தபோது,குறித்த சந்தேக நபர் போலி நாணயத்தாள் தொடர்பில் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம்,கல்முனை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜயசேகரவின் தலைமையின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரணகலவின் வழிகாட்டலின் பிரகாரம் தலைமை பிரதான பரிசோதகரின் கீழ் கல்முனை பெருங்குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி,பொலிஸ் சார்ஜன்ட் ரத்நாயக்க,யோகநாதன்,பொலிஸ் கொஸ்தாபல் சந்திரகாசன்,விமல்ராஜ் அடங்கிய குற்றத்தடுப்பு பிரிவினரால் தமன பொலிஸ் பிரிவினைச் சேர்ந்த மேலும் இரு சந்தேக நபர்கள் நேற்று 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட போது அவர்களின் உடமையில் இருந்து சில போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த சந்தேக நபர் இருவரும் இன்று(19) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர் என பெருங்குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இதன்போது தெரிவித்தார்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பெருங்குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்க்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.