தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய அலைவரிசையான நல்லிணக்க அலைவரிசையின் ஆரம்ப வைபவம் இடம்பெறவுள்ளது. இவ் ஆரம்ப பெருவிழா, ‘பனைமரக்காடும் - கலசகோபுரமும் இணையும் பாலம் இங்கே’ எனும் தொனிப்பொருளில் இன்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் 2.00 மணிக்கு தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கௌரவ அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தானத்தின் 3ஆவது அலைவரிசையாக ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த அலைவரிசை ‘நல்லிணக்க அலைவரிசை’ என்ற பெயரில் அழைக்கப்படும்.
இந்த நாட்டில் தமிழ் மொழியைப் பேசும் 25 சதவீத தமிழ், முஸ்லிம் மக்களுக்காக ரூபாவாஹினி ஆரம்பிக்கப்பட்டு, 35 வருடகாலமாக தமிழ் மொழி மூலம் அவர்களது கலை கலாசார மற்றும் நடப்பு விவகாரங்களை சரியான முறையில் வழங்குவதற்கு முடியாமல் இருப்பதனை, நிவர்த்தி செய்யும் முகமாக இந்த அலைவரிசை ஆரம்பிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)