பணத்தில் மட்டும் அரசியல் அதிகாரங்களைப் பெறலாம் என நினைத்து சில அரசியல் கட்சிகள் பணங்களை வழங்கி வாக்குகளைப் பெறுவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேனர். பணத்தில் மட்டும் அரசியல் அதிகாரங்களைப் பெறலாம் என்றிருந்தால் தமிழ் நாட்டு முதலமைச்சர் பதவியில் இன்று சசிகலா இருந்திருப்பார் என அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான பதுர்டீன், ஜெஸ்வர் ஆகியோர்களை ஆதரித்து பாலமுனையில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தமிழக முதலமைச்சர் திருமதி ஜெயலலிதா இறந்த பின் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டு சட்டசபை உறுப்பினர்களுக்கு பெருந் தொகை பணமும் நகையும் வழங்கி சட்டசபை உறுப்பினர்களை ஹோட்டல்களில் தங்க வைத்தார்.
குறுகிய கால இடைவெளிக்குள் அ.தி.மு.கா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஒரு வார காலத்திற்குள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில் சொத்துச் சேகரிப்பு வழக்கின் தீர்ப்பின் படி சிறைக்குச் சென்றார். இது தமிழ் நாட்டின் அரசியல் வரலாறாகும்.
இதே நிலமை எமது நாட்டின் அரசியலில் வரலாற்றிலும் நடந்துள்ளது. இவைகள் எமக்கு நல்ல பாடமாக அமையும். நடைபெறவுள்ள பிரதேச சபைத் தேர்தலில் மக்களின் பெறுமதியான வாக்குகளை பணம் கொடுத்து பெற முயற்சிக்கும் முஸ்லீம் கட்சிகளுக்கும் இந்நிலையே எனவும் இறைவன் யாருக்கு நாடுகின்றானோ அவர்களுக்கே அரசியல் அதிகாரம் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.