இலங்கை – பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதிய முக்கோணத் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த இலங்கை அணி, அடுத்த 3 மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி ஆடிய இலங்கை அணி துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசிய நிலையில், இலங்கை அணி 221 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணிசார்பில் உபுல் தரங்க 56 ஓட்டங்களையயும், சந்திமால் 45 ஓட்டங்களையும், டிக்வெல்ல 41 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணிசார்பில் ரூபல் ஹுசைன் 3 விக்கட்டுகளையும், முஷ்தபிசூர் ரஹ்மான் 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர்களை இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் சீரான இடைவேளைகளில் ஆட்டமிழக்கச் செய்தனர்.
பங்களாதேஷ் அணிசார்பில் மொஹமதுல்லா 76 ஓட்டங்களையும், முஷ்தபிசூர் ரஹ்மான் 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணிசார்பில் இன்றைய போட்டியில் அறிமுகமாகியிருந்த செஹான் மதுசங்க 3 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே மதுசங்க ஹெட்ரிக் விக்கட்டுகளை கைப்பற்றி, சாதனைப்பட்டியலில் இணைந்துள்ளார்.
இதற்கு முன்னர் தங்களது அறிமுக போட்டிகளில் ரபாடா, தாஜுல் இஸ்லாம் மற்றும் இலங்கை அணியின் வனிது ஹசரங்க ஆகியோர் ஹெட்ரிக் விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.
இந்த போட்டியில் செஹான் மதுசங்க 3 விக்கட்டுகளை கைப்பற்றியதோடு, அகில தனஞ்சய மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினர்.
இதேவேளை இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக உபுல் தரங்க தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடர் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் திசர பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.