மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு கணி, விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.  

இப்பிரிவினை ஆரம்பிப்பதற்கு ஊண்டு சக்தியாக இருந்த அப்போதைய கல்லூரியின் முதல்வரும், ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி அதிகாரியுமான ஐ.எல். மஹ்றூப் மற்றும் பிரதி அதிபர் ஏ.எம். அன்வர் ஆகியோர் இன்றுவரை இப்பிரதேச மக்களால் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

ஆனால் இக்காலம் அரசியல் காலம் என்பதால் சில அரசியல்வாதிகள் இப்பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட கணித, விஞ்ஞானப் பிரிவுக்கு தாங்கள் மாத்திரம்தான் சொந்தக்காரர்கள் என்றும், தாங்கள் மாத்திரம்தான் இதனை இன்றுவரை இயங்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் அரசியல் மேடைகளில் தங்களை காண்பிப்பதற்கு முற்பட்டுக்கொண்டிருப்பதோடு, முற்பட்டும் உள்ளனர்.

இவ்விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் மீராவோடை கல்வி அபிவிருத்தி வட்டம் என்கின்ற ஓர் அமைப்பினை தற்போது இப்பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றி வரும் ஏ.எம். அன்வர் ஆசிரியர் அவர்களை தலைமையாகக் கொண்டு  ஆரம்பித்து இதற்குரிய கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். இப்போதும் அதன் தலைவராக அவரே காணப்படுகின்றார்.

இப்பிரதேசத்தில் தானும் அக்கறை கொண்டவன் என்ற ரீதியிலும், இப்பாடசாலையின் பழைய மாணவன் என்ற ரீதியிலும், இப்பாடசாலையின் தற்போதுள்ள பழைய மாணவர் சங்கத்தில் ஓர் உறுப்பினராக பதவி வகிப்பவன் என்ற ரீதியிலும் சில விடயங்களை இப்பாடசாலைக்கு செய்துள்ளேன் (ளோம்.)

அதன் ஓர் அங்கமாக இவ்வமைப்பினூடாக 2014ஆம் ஆண்டுக்கான அச்சடிக்கபட்ட (கலண்டர்) நாட்காட்டியை இப்பிரதேசத்திலுள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனம், யூத் ஸ்டார் விளையாட்டுக்கழகம் மற்றும் அல் இஹ்ஸான் விளையாட்டுக்கழகம் போன்றவற்றினால் வீடுவீடாக. வீதிவீதியா இதனை விற்பனை செய்து அதன்மூலம் ஒரு தெகைப் பணத்தினை இலாபமாக இம்மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் பெற்றுக்கொடுத்தனர்.

மேலும், இப்பாடசாலையில் கல்வி கற்று  வெளிநாட்டில் தொழில்களை மேற்கொண்டுவரும் இப்பாடசாலையின் பழைய மாணவர்களினாலும் ஒர் அமைப்பு உருவாக்கப்பட்டு இப்பிரிவுக்கான நிதி உதவிகளும் சில வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன்பிற்பாடு 2014ஆம் ஆண்டு கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தினால் (தற்போது அஷ்ஷபர் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்களும் இதில் உள்ளடக்கப்பட வேண்டியவர்கள்) ஆஇஅகு தனியார் கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் அவர்களை இவ்வமைப்பினர் சந்தித்து சுமார் 18 மாதங்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகை நிதியினை இம்மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில்  பெற்றுக்கொடுத்தனர்.  

மேலும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் ஊடக இணைப்பாளராக நான் கடமையாற்றியபோது எனது தனிப்பட்ட முயற்சியினால் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினூடாக 2017ஆம் ஆண்டில் ஒரு வருட காலத்திற்கு குறிப்பிட்ட ஒரு தொகை நிதியினை அவரின் சொந்த நிதியிலிருந்து இம்மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் பெற்றுக்கொடுத்துள்ளேன்.  

இறுதியாக இப்பாடசாலையில் காணப்பட்ட தொழிநுட்ப கட்டடத்தின் மேல் மாடியினை முற்றுமுழுதாக கட்டி முடிப்பதற்கான ரூபா 35 இலட்சம் ருபாய் நிதிகளை எனது தனிப்பட்ட முயற்சியினால் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களிடம் தெரியப்படுத்தி அவரினூடாக முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் அவர்களின் 2017ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு இன்று அக்கட்டிடம் பூர்த்தியான நிலையில் காணப்படுகின்றது.

ஆனால் இப்பொழுது இப்பாடசாலையின் கணித, விஞ்ஞானப் பிரிவுக்கு உதவி செய்து வருபவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மீராவோடை ஜூம்ஆப் பள்ளிவாயல் மற்றும் இப்பாடசாலையில் கல்வி கற்று இப்பொழுது செரன்டிப் மா ஆலையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி உயர்வுபெற்றுள்ள எச்.எம்.எம். றியாழ் (தனது சொந்த நிதி) ஆகியோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றுவரை மீராவோடை ஜூம்ஆப் பள்ளிவாயலினால் மாதம் ஒன்றிட்கு இப்பாடசாலையின் கணித, விஞ்ஞானப் பிரிவுக்கு குறிப்பிட்ட ஒருதொகைப் பணம் வழங்கப்பட்டு வருகின்றது. இப்பணமானது இப்பள்ளிவாயலின் நிருவாகத்தின் கீழுள்ள கிராமங்களை உள்ளடக்கிய மக்களினால் மாதாந்தம் செலுத்தப்படும் பள்ளிவாயலுக்கான வரிப்பணத்திலிருந்தே வழங்கப்படுகின்றது.

இவை அனைத்தும் இவ்வாறிருக்க தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக இப்பாடசாலையிலுள்ள கணித, விஞ்ஞானப் பிரிவினை ஆரம்பிப்பதற்கும் இன்றுவரை நல்ல அடைவுகளை இப்பாடசாலை காண்பதற்கும் அரசியல்வாதியான தாங்கள் மாத்திரம்தான் சொந்தக்காரர்கள் என்று எவரும் தனிப்பட்ட உரிமை கோர முடியாது. இதுபொதுமக்களின் பணம், அவர்களின் வரிப்பணம், இதற்கு சொந்தக்காரர்கள் இப்பிரதேசத்திலுள்ள ஒவ்வொறு குடும்பங்களையும் சேர்ந்த மக்களாகும் என்பதனை அரசியல் வங்குரோத்துக்காரர்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், நிதியினை மாத்திரம் வழங்கினால் போதாது அதற்குரிய சகல விதமான நிருவாக நடவடிக்கைகள், இம்மாணவர்கள் இன்றுவரை இப்பாடசாலையில் கணித, விஞ்ஞானப் பிரிவினால் பெற்றுக்கொள்ளக் கூடிய சிறந்த அடைவுகளுக்கும், பெறுபேருகளுக்கும் என்றும், எப்போதும், இப்போதும் வாழும்போதே இப்பிரதேச மக்களால் பாராட்டக்கூடிய ஒரேநபர் என்றால் இப்பாடசாலையில் தற்போது பிரதி அதிபராக கடமையாற்றி வரும் ஏ.எம். அன்வர் ஆசிரியர் என்கின்ற ஓர் உன்னத மனித நேயமே என்பதனை நாம் அனைவரும் அறிந்து, புரிந்து செயற்பட வேண்டும்.

எம்.ரீ. ஹைதர் அலி