இந்தியவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாகவும், சீனாவை எதிர்கொள்ளும் முழு ஆற்றல் இந்திய ராணுவத்திடம் இருப்பதாகவும், ராணுவத் தளபதி திரு. பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

இந்திய ராணுவ தளபதி திரு. பிபின் ராவத், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சீனா ராணுவம் தலைசிறந்த கட்டைமைப்பு கொண்டது என்றாலும், அதைக் கண்டு இந்தியா அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்றும் சீனாவை எதிர்கொள்ளும் முழு ஆற்றல் இந்திய ராணுவத்திடம் உள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது இந்திய ராணுவத்தின் கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், நவீன ரக பாதுகாப்பு உபகரணங்கள் நம்மிடம் உள்ளது என்றும் உலகளவில் தலைசிறந்த ஆயுதங்களும் நம்மிடம் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

இந்தியவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது என்றும் ஒரு திசையில் இருந்து மற்றொரு திசைக்கு படைகளை உடனடியாகவும், துரிதமாகவும் செயல்பட்டு கொண்டு சேர்ப்பதில் தற்போது முழு கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். 

டோக்லாம் எல்லையைப் பொறுத்தவரையில் இரு நாடுகளின் படைகள் திரும்பப்பெறப்பட்டுள்ள போதிலும், எந்த சூழலிலும் அடுத்த நிகழ்வுகள் குறித்து எச்சரிக்கையுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். அண்டை நாடுகளுடனான உறவில் இந்திய அரசு எப்போதும் சுமுக நிலையை மட்டுமே விரும்புவதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் குறிப்பிட்டார்.