சி.அபிகாசினி - ஊடகப்பயிலுனர்
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் உடல், உள ரீதியாக இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடாத்தப்படும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் திருமணம் எனலாம். ஆனால் இத்திருமணத்தை நிர்ணயிப்பதில் சீதனம் பெரும் பங்கை வகிக்கின்றது.
சமயம், சாதி, அந்தஸ்து, வயது, சாதகம் பொருத்தம், அழகு, கல்வி, தொழில் என்பன பொருந்திய அனேகமான திருமணப் பேச்சுகள் சீதனப் பேச்சுவார்த்தையில் முறிவடைந்து போயுள்ளது.
ஆரம்பகாலத்தில் நிலப்பிரபுக்கள் தமது அந்தஸ்தை நிலைநாட்ட சீர், பரிசுகளை வழங்கினார்கள். இவ்வழக்கமானது இன்று பெண்ணிடம் கட்டாய சீதனமாக பரிணாமம் பெற்றுள்ளது.
பெண் குழந்தை குடும்பத்தில் பிறந்ததும் "பெண் பி்ள்ளை பிறந்தாலே சாபக்கேடு" என குழந்தை மேல் வெறுப்பேற்படும் அளவிற்கு சீதனத்தொல்லை மாறிவிட்டது.
இச் சீதனப் பகிர்வின் போது சீதனம் தம் குடும்ப குலத்தைவிட்டு விலகக்கூடாது என்பதற்காக உறவுக்குள் திருமணம் செய்து வளமற்ற பிள்ளைகள் எம் சமூகத்தில் பிறந்த சம்பவங்களும் காணப்படுகின்றது.
இன்று ஒவ்வொரு இனம், மதம், சாதி என்பவற்றுக்கிடையே சீதனமானது வெவ்வேறு முறைகளில் இருப்பதை அவதானிக்கலாம்.
பிராமண சமூகத்தினர் தெய்வத்திற்கு பக்தர்கள் தட்சணை வழங்குவது போல மாப்பிள்ளையான வரனுக்கு பெண் வீட்டார் தட்சணையாக பணம், சொத்து வழங்குவதை கொள்கையாகவே பேணிவருகின்றார்கள். ஏனைய சமூகத்தை விட பிராமண சமூகத்தில் சீதனக்கொடுமை அதிகம் எனலாம்.
இஸ்லாமிய மதத்தில் குர் ஆன் பெண்னை கண்ணியப்படுத்தி மணமகள் மணமகனிடம் கேட்டுப் பெற்று கொள்ளும் மஹறை (செல்வம் ) பெண்கள் கேட்பதில் கரிசனை அற்றுப் போக அது இன்று சீதனமாக இஸ்லாம் பெண்களுக்கு எதிராக திரிபடைந்துள்ளது.
சீதனமானது இன்று எம் சமூக பெண்களை அடிமைத்தனத்துள் வைத்துள்ளது. ஆனால்
ஐரோப்பிய திருமணத்தில் சீதனம் இல்லை என்ற காரணமும் ஐரோப்பிய நாடுகளில் ஆண், பெண் சமத்துவம் பேண வழிவகுக்கின்றது எனலாம்.
ஆரம்பகாலத்தில் பணம் பொருளாக இருந்த சீதனமானது இன்று நகைகள், உடைகள், பணம், சீர் வரிசைகள், பெட்டி சீர், அண்டா குண்டா, தட்டு முட்டு சாமான்கள், ஃபர்னிச்சர், ஏசி கார், வீடு, காணி, கலியாண விருந்து, கலியாணப் பத்திரிகை, போஸ்டர், மண்டபச்செலவு என அடுக்கி கொண்டே போகலாம்.
இவ் சீதனத்தை ஒழிக்கும் முகமாக இந்தியாவில் தடைச்சட்டங்கள் கொண்டு
வந்தமை சிறப்பான ஓர் விடயமொன்றாகும்.
இதே போன்று ஈழத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் சீதன முறையை ஒழிக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. ஆயுத போராட்ட முடிவின் பின் மீண்டும் சீதனக் கொடுமை மேலோங்கி நிற்பது வேதனைக்குரியதாகும்.
இன்று வேலைவெட்டியில்லா மாப்பிளை, கூலிவேலை மாப்பிளை, தனியார் துறை மாப்பிளை, அரச சிற்றூழியர், வைத்தியர் மாப்பிள்ளை, வெளிநாட்டு மாப்பிள்ளை, என ஆண்களை தரம் பிரித்து சீதன பேச்சுவார்த்தை இடம்பெறுவதை எம் சமூகத்தில் அவதானிக்கலாம்.
பொருளாதார வசதியற்ற பெண்கள் சீதனம் செலுத்த முடியாத நிலையில் திருமணங்கள் தள்ளிப்போதல், தங்களுக்கு பொருத்தமான கணவனை தெரிவு செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலை போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள்.
இதனால் சில நேரங்களில் பெண்கள் இரண்டாந்தாரம், மூன்றாம் தாரம், வயது முதிர்ந்தவரை மணத்தல் போன்ற சம்பவங்களும் சிலவேளைகளில் தந்தையால் திருமணம் செய்து வைக்க முடியாத நிலையில் முதிர் கன்னிகளாகவும், சில பெண்கள் வழிதவறிய நிலையையும் அவதானிக்கலாம்.
தமிழ் சமூகத்தின் பெண்கள் சீதனத்திலிருந்து விடுபடுவதற்கும் சொகுசான வாழ்க்கையை வாழ்வதற்கும் வளர்முக நாடுகளில் உள்ள வயது முதிர்ந்தவரை திருமணம் செய்வது இன்று வழமையாகியுள்ளது எனலாம்.
சீதனத்தினால் பொருத்தமற்ற நபர்கள் திருமணத்தில் இணைந்தால் இல்லறவு வாழ்க்கை கசப்பாகவே அமையும்.
இவ் சீதனத்தை எதிர்த்து சமூகத்தில் பெண்ணுரிமைக் குழுக்கள் சீதனம் கேட்கும் ஆண்களை இழிவுபடுத்தி "ஆண் விபச்சாரம், உழைத்து நிற்க முதுகெலும்பற்ற ஆண்கள் கேட்கும் பிச்சைக்காசு" என சீதனம் கேட்கும் ஆண்களை கேவலப்படுத்தி சமூகத்தில் விழிப்புணர்வுகள் மேற்கொள்வது பபாராட்டுக்குரிய விடயமாகவே அமைகின்றது.
'ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி' என்பதற்கு இணங்க தந்தைகள் மகளுக்கு திருமணம் செய்தப்பின் முதுமை காலத்தை வறுமையிலும் திருமணத்திற்காக கடன்களை பெறுவதால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அசௌகரிய நிலைக்கும் உள்ளாகின்றார்கள்.
சீதனத்தினால் நேரடியாக பெண்கள் பாதிப்பு அடைந்தாலும் மறைமுகமாக ஆண்களே அதிகம் பாதிப்படைகின்றார்கள்..மாப்பிள்ளையாக மனைவியிடம் சீதனம் பெறும் அதே ஆண்கள் தந்தையாக மகளுக்கு சீதனம் செலுத்துகிறார்கள். இருந்த போதிலும்
ஆரம்ப காலத்தில் இருந்த சீதனத்தை இன்றைய தலைமுறை வரை ஆண்கள் காவியாக கடத்தியமை கொடுமையானது.
சீதனத்தினால் பொருத்தமற்ற துணைத் தேர்வு, வாழாவெட்டி, வழிதவறி செல்லல், குடும்ப பிளவு, கன்னியாகவே மரணித்தல் போன்ற அநீதிகளில் இருந்து பெண்னை காக்க முனைவோம்.
"இன்று மாப்பிளையாக சீதனம் பெற்று சொகுசாக வாழ்வாயாயின்,
நாளை தந்தையாக சீதனம் கொடுத்து வறுமையில் வாடுவாய்"
| குறிப்பு: எமது FME ஊடகப் பயிலுனர்களால் பயிற்சிக்காக எழுதப்படுகின்றன கட்டுரைகள் இங்கே தொகுக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக இத்தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் தொடர்பான கருத்துக்களை நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம். |

