தமிழினத்தைப் பாதுகாத்து வருகின்ற தமிழரின் உரிமைகளுக்காகக் இதுவரை குரல்கொடுத்து நடவடிக்கை எடுக்கின்ற இந்த வீட்டுச் சின்னத்தை நிராகரிப்புச் செய்தவர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு மற்றும் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழர்களின் முக்கியமான கட்சி. தமிழ் மக்களுக்காக பாராளுமன்றத்தினுள்ளும், வெளியிலும், சர்வதேசத்திலும் பேசிக்கொண்டிருக்கின்ற கட்சி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான். இன்று தேர்தல் என்றதும் பல கட்சிகள் இன்று எம் மக்கள் முன் வந்திருக்கின்றன.

எமது மக்களுக்கான சிறு சிறு அபிவிருத்தித் தேவைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், வீதிகள் புனரமைப்பு, மீன்பிடி கட்டிடங்கள் அமைப்பு போன்ற செயற்பாடுகளை அரசாங்கத்தில் இல்லாமலேயே நாங்கள் செய்திருக்கின்றோம்.

அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்துதான் கிழக்கு மாகாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்தளவிற்கு வலிமை பெற்ற கட்சி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சென்ற சூரியன் சின்னம் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி காண்பது தான் வழக்கம். இந்த சூரியன் சின்னத்தின் தலைவர் ஆனந்த சங்கரி அவர்கள் தான் பிறந்த ஊரிலே இந்தச் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் அவர் பிறந்த ஊரிலேயே அவருக்கு வாக்கு இல்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மூன்று பேர் கிளிநொச்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டார்கள்.

தமிழினத்திற்குத் துரோகம் செய்தது இந்தச் சூரியன் சின்னம் என்ற வகையில் மக்கள் இதனை நிராகரித்தார்கள். அதன் பின்னர் அவர் அதனை எவ்வாறு பயன்படுத்தவது என்று இருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் தானாகப் பிரிந்து சென்றார்கள். அவர்கள் இந்தச் சூரியன் சின்னத்தை ஆனந்த சங்கரியிடம் கனாகப் பெற்று இந்தத் தேர்தலில் களமிறங்கியிருக்கின்றார்கள்.

தமிழினத்தைப் பாதுகாத்து வருகின்ற தமிழரின் உரிமைகளுக்காகக் இதுவரை குரல்கொடுத்து நடவடிக்கை எடுக்கின்ற இந்த வீட்டுச் சின்னத்தை நிராகரிப்புச் செய்தவர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவர். தமிழ்த் தேசியத்தின் சின்னம் விட்டுச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களைக் கொண்டு லண்டனுக்குச் சென்று அங்கு புலிகளின் பெயரை வைத்து உழைத்த ஜெயானந்தமூர்த்தி எனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தற்போது சூரியன் சின்னத்தில் வந்திருக்கின்றார். நகைச்சுவையான விடயம் என்னவென்றால் அவர் லண்டனிலே நாடு கடந்த தமிழீழம் கேட்டு புலிகள் தான் எங்கள் தலைவர்கள் என்று இருந்தவர். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இருந்து புலிகளைக் காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளைச் செய்தார். பின்னர் நிலைமை சீரானதும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அவரை இங்கு எடுத்தது. யானைச் சின்னத்திலே வேட்பாளரை நிறுத்த நடவடிக்கை எடுத்து வந்தார் ஆனால் பாரம்பரியமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தவர் இவர் யார் என்பதை ரணிலுக்குத் தெரியப்படுத்த அவர் இவரை ஒதுக்கி விட்டார். பின் போக வழியில்லாமல் ஓடிப்போய்ச் சூரியனில் இறங்கி தற்போது பிரசாரம் செய்கின்றார்கள்.

வெட்கம் கெட்டவர்கள், தமிழ் இனத்தை விற்றுப் பிழைத்தவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கலாமா? எனவே தமிழ் மக்களின் சின்னம் வீடுதான். தமிழ் மக்களுக்கு பிரச்சனை வரும் போதெல்லாம் வீடுதான் தட்டிக் கேட்கும். அது மாத்திரமல்ல ஒட்டகத்தில் கூட எங்களது பிரதேசத்தில் வாக்குக் கேட்கின்றார்கள் அவர்கள் தமிழர்களா? இந்த நிலைமைகளில் எமது மக்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

கொள்கையில்லாதவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். தமிழர் சின்னம் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

-செய்தியாளர் - டினேஸ்-