போதைவஸ்து பாவனையில் பாடசாலை மாணவர்கள் பலர் உள்வாங்கப்பட்டு வேதனைக்குரிய பல சம்பவங்கள் நடப்பதை நாங்கள் பார்க்கின்றோம் நாங்கள் பாடுபடுவது உழைப்பெதெல்லாம் எங்களுடைய பிள்ளை நல்லபிள்ளையாக, இந்த சமூகத்தின் புகழ்பெற்றவொரு பிள்ளையாக திகழவேண்டும் என்பதற்காகத்தான் என்று மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எஸ்.இஸ்ஸதீன் தெரிவித்தார்.
அண்மையில் நடைப்பெற்ற வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும்போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் பேசுகையில்,
எங்களுடைய கண்காணிப்பிலிருந்து பிள்ளைகளை நாங்கள் நீக்கிவிடுவோமாக இருந்தால் எங்களுடைய பிள்ளைகள் வழிகேட்டில் வேறொரு பாதையில் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுவிடும் ஆகவே பெற்றோர்கள் பிள்ளைகளின் ஒவ்வொருகட்ட நகர்விலும் கண்காணிப்பாக இருக்கவேண்டும். அத்தோடு பிள்ளைகளின் கல்விநிலை பற்றி, கல்வி போதிக்கின்ற ஆசிரியர்களோடு தொடர்புகளை வைத்திருக்க வேண்டும். பிள்ளை பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்துவிட்டால் இன்று பாடசாலையில் என்ன நடந்தது, என்ன கற்றுத்தந்தார்கள் என்பவற்றை பெற்றோர்கள் பார்க்கவேண்டும்.
ஒருபிள்ளையின் வளர்ச்சியில் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என இருதரப்பினரும் கைகோர்க்க வேண்டும் இருவரும் இணைந்து பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப்பற்றி திட்டமிட்டு நல்ல வழிகாட்டல்களை வழங்கவேண்டும். அவ்வாரானால்தான் அவர்கள் சிறப்பான எதிகாலத்தை நோக்கி நகர்வார்கள் ஆகவே மாணவர்கள் கல்விகற்க வேண்டும் இந்த சமூகத்தில் நல்ல பிரஜைகளை உருவாக வேண்டும் என்பதற்காக அரசாங்கம் பாடசாலைகளில் இலவசப் பாடநூல்கள், சீருடைகள், பாதணிகள், போசாக்கு உணவு என்பவற்றை மாணவர்கள் கல்வி கற்பதற்காக இலவசமாக அனைத்து வசதிவாய்ப்புக்களை அரசாங்கம் வழங்கிக் கொண்டிருக்கிறது.
ஆகவே எந்தவொரு மாணவனும் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கமுடியாது அவ்வாறு பிள்ளை செல்லாமல் விட்டால் பெற்றோர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவார்கள் அவர்கள் மீது சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவே இப்பொழுது பாடசாலைகளில் இருக்கின்ற எல்லா மாணவர்களும் கட்டாயம் கல்விகற்று இந்த சமூகத்தின் நல்ல பிரஜைகளாக உருவாகுவதற்கான வாய்ப்புகள் பாடசாலைகளில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உங்களுடைய பிள்ளைகள் எங்கே செல்லுகின்றான் எப்படிப்பட்ட நண்பர்களோடு சேருகின்றான் என்பதை நீங்கள் அவதானிக்க வேண்டும் நல்ல நண்பர்களோடு சேர்வதற்கு அனுமதிக்கவேண்டும் தீயவர்களோடு சேர்ந்தால் அவர்களை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். எனவே மாணவர்கள் கல்விநிலையில் மேம்பட்டு எதிர்காலத்தில் கல்விமான்களாக, சமூகத்தில் அந்தஸ்துள்ளவர்களாக திகழவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பிரார்த்திக்கிறேன் என்றார்.
(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)