எதிர்வரும் 8ம் திகதி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம்.நஸீர் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம்.நஸீர் நியமிக்கப்பட்டமைக்காக மண்ணுக்கு மகுடம் சூடும் மகிழ்ச்சிப் பெருவிழா அட்டாளைச்சேனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது கட்சி இங்கு தோல்வியடைந்து விடும் என்ற பயத்தின் காரணமாகத்தான் அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கு கட்சியினால் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஏ.எல்.எம்.நஸீருக்கு வழங்கப்பட்டதாக மயில் கட்சியினர் கூறுகின்றார்களாம் ஆனால் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கினாலும் அல்லது வழங்க விட்டாலும் அட்டாளைச்சேனை பிரதேச சபையினை அதிகாரத்தினை பெறுவோம். சிலர் கூறுகின்றார்கள் இன்னும் வர்த்தமானி அறிவித்தல் வரவில்லை என கூறுகின்றார்களாம் யாரும் யோசிக்கத்தேவையில்லை எதிர்வரும் 8ம் திகதி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம்.நஸீர் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்யுவுள்ளார்.

வன்னி மாவட்டத்திற்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் அதன் தேவையுள்ளது. ஆனால் தற்போது வழங்காமல் மயில் கட்சியினருக்கு வன்னியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் நான் தகுந்த பாடம் கற்பிக்கவுள்ளேன்.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பல கிராமங்களையும் மாவட்டங்களையும் அடிப்படையாக வைத்து எமது கட்சியினால் வழங்க வேண்டிய தேவையுள்ளது.ஆனால் இனிமேல் தேசியப்பட்டியல் பதவி எந்தப் பிரதேசங்களுக்கும் வழங்கப்படும் என கட்சியினால் உறுதி மொழி வழங்கப்பட்டாது.இத் தேர்தலின் பின்னர் கட்சியின் பேராளர் மாநாடு நடைபெற்று கட்சியை புனராமைப்பு செய்யப்பட வேண்டியுள்ளது.அதனை மேற்கொள்ளவுள்ளேன்.

ஆரம்பமுதல் இன்றுவரை கட்சியின் வளர்ச்சிக்காக செயற்பட்டுவரும் இக்கட்சியின் ஸ்தாபகச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் கட்சியின் உயர்பீட உறுப்பினர் எஸ்.எல்.எம்.பளீல் ஆகியோர்கள் இக்கட்சியினால் கௌரவப்படுத்தப்படவுள்ளனர்.தேசியப்பட்டியல் பாராளுமன்றப் பதவி வழங்கப்படவில்லை என்ற காரணத்தை மையமாக வைத்து மாற்றுக்கட்சியினர் சதி செய்வார்கள் இந்த வலைக்குள் இவர்கள் விழமாட்டார்கள்.

இந்த கட்சியில் இருந்து அதிகாரங்களைப் பெற்ற சிலர் என்னை மேடை மேடையாக விமர்சித்துக் கொண்டு வருகின்றார்கள் இதற்கு கூலியை இறைவன் வழங்குவான் அவர்களைப் பற்றி நான் இங்கு கூறவரவில்லை ஒரு தரப்பில் சமகால விடயங்கள் பற்றி  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவமும் பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீசும் பல விடயங்களை இங்கு வைத்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியை அழித்த பெருமை எமது கட்சியைச்சாரும் ஏனெனில் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபுக்கு ஐக்கிய தேசியக் கட்சியைப் பிடிக்காது.ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள பலரை எமது கட்சி உள்வாங்கி அக்கட்சியை நாங்கள் அழித்துக் கொண்டிருக்கின்றோம்.ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மர்ஹும் மசூர் சின்னலெப்பை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் றிஸ்வி சின்னலெப்பை முன்னாள் அமைச்சர்களான ஏ.ஆர்.எம்.மன்சூர், எம்.எம்.முஸ்தபா உள்ளிட்ட பலர் எமது கட்சியில் இணைந்து பெரும் பங்காற்றினர். இதை யாவரும் அறிவீர்கள் அம்பாறை மாவட்டத்தில் யானைச்சின்னதில் தேர்தல் கேட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருசில வேட்பாளர்களைத் தவிர மற்றைய அனைத்து வேட்பாளர்களும் நமது கட்சியைச் சேர்ந்தவர்களாகும்.

சிங்களப் பகுதியில் சிலர் கூறுகின்றார்கள் ஐக்கிய தேசியக் கட்சியை மரத்திற்கு அடகு வைத்து விட்டார்கள் என்றும் நமது முஸ்லிம் பிரதேசங்களில் கூறுகின்றார்கள் மரத்தை யானைக்கு விற்று விட்டோம் என்றும் பேசப்படுகின்றது.இவை எல்லாம் பொய்யான விடயங்களாகும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டதற்கிணங்க அம்பாறையில் யானைச்சின்னத்திலும் சில பிரதேசங்களில் மரச்சின்னத்திலும் போட்டியிடுகின்றோம்.சரியான வியூகத்தின் அடிப்படையில் கட்சியின் கோட்பாட்டை விட்டுக் கொடுக்காமல் உள்ளூராட்சி மன்றங்களை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக எமது கட்சி செயற்படுகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது இந்த நாட்டில் மிகவும் சக்திபெற்ற ஒரு கட்சியாகும் இக்கட்சியை யாராலும் அழித்து விடமுடியாது அதன் மக்கள் சக்தியை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிரூபித்துக்காட்டும் என்றார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,பைசல் காசீம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம்,ஆரீப் சம்சுத்தீன் கட்சியின் தவிசாளர் ஏ.எல்.மஜீத்,உயர்பீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட் முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினரும் அறபா வட்டார வேட்பாளருமான தமீம் ஆப்தீன் உட்பட வேட்பாளர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(றியாஸ் இஸ்மாயில்)