தமிழர்களை எந்தவேளையிலும் எதற்காகவும் கைதுசெய்ய முயற்சிக்கலாம் என்பது இப்போதும் சிங்களதேசம் தனது பேரினவாத மனோநிலையிலிருந்து சற்றும் மாறவில்லை என்பதுடன் கடந்தகால கசப்பியல் சந்தர்ப்பங்களில் இருந்து எதனையும் கற்றுகொள்ளவில்லை என்பதுவே அண்மைய பாதுகாப்பு அமைச்சரது பேச்சுக்கள் சுட்டிநிற்கின்றது.

வடகிழக்கு பரப்பெங்கும் 2009ம் ஆண்டிற்குப் பிறகு  போராளிகள், பொதுக்கள்,  சமூகஅமைப்புக்கள் மற்றும் பற்றாளர்களால் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயக மக்களின் தன்எழுச்சியான உணர்வுகளையும் மன வேட்கையினையும் பறை சாற்றியிருக்கிறது.

மாறாக தெற்கில் பெரும்பான்மையாக சிங்கள மக்கள் கூடிய நிகழ்வொன்றில் இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறிய கருத்துக்கள் தமிழர் தரப்பிலே பாரிய சந்தேகங்ளை தோற்றுவித்துள்ளது.

அதிக வெளிப்பாட்டுத் தன்மையுடன் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் வார நிகழ்வுகள், இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை சிதைக்கத்தக்க வகையான சம்பவங்களை தவிர்த்துக் கொள்ளுதல், ஏற்கனவே துயரங்களுடன் வாழும் தாயக மக்களின் பாதுகாப்பு மற்றும் இயல்பு நிலையைப் பேணுதல்  என்ற இரட்டை  நிலைப்பாட்டையும் எமக்குள் சுமத்தியிருந்தது.

அவ்வாறானதொரு பின்னணியில் நடைபெற்றிருந்த மாவீரர் நாள் நிகழ்வுகள் எவ்வித அசம்பாவிதங்களும் அற்ற மக்களின் அபிலாஷைகளையும் உணர்வுகளையும் மாத்திரமே பிரதிபலிப்பதாக நிறைவுற்றிருந்தது.

யுத்தத்தின்போதும் தமிழர்கள் தம் மரபுரிமைகளை மீட்பதற்கான போரின்போதும் இறந்தவர்களை நினைவில்கொள்வது எந்தவகையிலும் பிரிவினையினையோ வன்முறையினையோ எடுத்துக்காட்டுவதில்லை மாறாக உயிரிழந்தவர்களை நினைவேந்தி பூஜிப்பது தமிழர்களது நன்றி உணர்வினையும் மன ஆற்றுகையையும் ஏற்படுத்தி சென்றதென்பதே உண்மை இருப்பினும் இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  கூறிய கருத்துக்கள் தமிழர் வாழ்வியல் மரபுரிமைகள் தமிழ் மக்களுடைய ஜனநாயக எழுச்சி மற்றும் போருக்குப் பின்னரான தமிழரின் வாழ்வெழுச்சியை தடுக்க நினைக்கும் நல்லாட்சி அரசின் ஓர் இடர்பாடான அணுகுமுறையாவே இதனை நாம் பார்க்கவேண்டியுள்ளது.

தெற்கில் சிங்கள பௌத்த வாக்குகளைக் கவர்வதற்கான ஓர் இனவாத தோற்றத்தையும், வடகிழக்கிலே மீள் இணக்கம் மற்றும் தேசிய சகவாழ்வு என்ற வேடத்தையும், சர்வதேசப் பரப்பில் நீதி மற்றும் ஜனநாயக. போர்வையையும் போர்த்துக்கொண்டு இலங்கையின் நல்லாட்சி அரசு தனக்குள் தானே முரண்பட்டதொரு வகிபாகத்தை ஆற்றுகின்றதோ என்கின்ற சந்தேகத்தையும் கேள்வியையும் அது  எமக்குள் எழுப்புகின்றது.

நீதிக்கு முரணான விசாரிப்புக்கள் மற்றும் கைதுகள், தடுத்து வைத்தல், சித்திரவதைகளுடன் கூடிய விசாரணைகள் என்று தொடரும் அனைத்துலக குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் இந்த வாதம் இலங்கையின் நல்லாட்சி அரசும் தேசிய இனங்களின் ஜனநாயக நடவடிக்கைககளின் மேல் தனது புலனாய்வு மற்றும் இராணுவ மேலாதிக்கத்தை திணிக்க எத்தனிக்கின்றதோ என்ற விசனத்தையும் எமக்குள் ஏற்படுத்தியுள்ளது.

இரானுவ மேலாதிக்கம் மற்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை விசாரணைகள் மற்றும் கைதுகளூடாக அணுகுவது என்பது சாத்தியப்பாடான மீளிணக்கத்திற்கு எவ்வகையிலும் வலுச்சேர்க்காது என்பதுடன் அதுவே துயரங்களை சகித்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் வாழ்வியலில் மேலும் நெருக்கடிகளை உருவாக்குவதுடன் தேசிய சகவாழ்வை ஏற்படுத்துவதில் அது எதிர்மறையான விளைவுகளைத் தரும் என்பதை இலங்கையின் நல்லாட்சி அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்கள் தாம் வரிந்துகொண்ட தலைவரின் பிறந்தநாளினை கொண்டாடிக்கொள்வதென்பது அவர்களது பிறப்புரிமை வாழ்வுரிமையுடன் சம்பந்தப்பட்டது அதனை பூதாரமாக்கி பெரும்பான்மையை திருப்திப்படுத்த கைதுகள் விசாரிப்புக்கள் எனமுயல்வதென்பது இன்னுமொருதடவையும் இலங்கைத்தீவை இடர்கள்மிகுந்த தீவாக சர்வதேசம் உற்றுநோக்க வாய்ப்பாகவே அமையும். சட்டரீதியற்ற கைதுகள் விசாரணைகள் மற்றும் அடக்குமுறைகள் தமிழர்கள் சுயநிர்ணயத்துடன்கூடிய சுய ஆட்சியொன்றிற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவே வழிவகுக்கும் என்பது காலத்தின் தேவையாகும்.

க.துளசி
ஊடகப் பிரிவு ஜனநாயகப் போராளிகள் கட்சி