ராணுவத்தில் பணிப்புரிந்த ஹாதியாவின் தந்தை அசோகன் பாஜகவை சேர்ந்தவராக இருந்திருக்கிறார்.
அவ்வப்போது தந்தையின் இஸ்லாமிய விரோத பேச்சுக்களை கேட்டு வளர்ந்த ஹாதியாவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது தமிழக வருகை...
சேலத்தில் உள்ள சித்த மருத்துவக்கல்லூரியில் இணைந்த ஹாதியாவுக்கு அறை தோழியாக இஸ்லாமிய பெண் அமைகிறார்.

அறை தோழி மற்றும் சக இஸ்லாமிய தோழிகளின் நடவடிக்கைகளை காணும் ஹாதியா அவர்களை உற்று நோக்குகிறார். இஸ்லாமிய பெண்களின் பேச்சு, நடத்தை, ஒழுக்கம், கண்ணியம், தூய்மை, தொழுகை என ஒவ்வொன்றும் ஹாதியாவை இஸ்லாத்தை காதலிக்க தூண்டுகிறது.
இஸ்லாத்தை பற்றிய தேடலில் இறங்குகிறார். இணையதளங்கள் வழியாகவும், இஸ்லாமிய தோழிகளின் வாயிலாகவும் இஸ்லாத்தை பற்றி மேலும் மேலும் தெரிந்து இஸ்லாத்தின் கடவுள் கொள்கை அவரது சிந்தனையை நுட்பமாக தூண்டுகிறது.
ஒரு கடவுள் கொள்கை :
நாமே உருவாக்கிய பொருள் நமக்கு கடவுளாக இருக்க முடியாது. நம்மை உருவாக்கியவனே கடவுளாக இருக்க முடியும். இப்பிரபஞ்சத்திற்கு பல கடவுள் இருக்க முடியாது. ஒரே கடவுள் மட்டுமே இருக்க முடியும் என்ற தெளிவுக்கு வருகிறார்.
இதனால் லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை, முஹம்மது அல்லாஹ்வுடைய தூதர்) என்ற கலிமாவை உறுதி பூண்டு இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்கிறார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய பெண்ணாக வாழும் ஹாதியா இஸ்லாமிய சட்டப்படி இஸ்லாமிய ஆணையே திருமணம் முடிக்க வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு இணையதளங்கள் வழியாக மணமகன் தேவை என பதிவு செய்து இஸ்லாமிய ஆணையே திருமணம் முடிக்கிறார்.
இது பாஜக தந்தைக்கு கோபம் வரவே தம்முடைய மகளுக்கு கட்டாய மதமாற்றம் செய்ததாகவும், கட்டாய திருமணம் செய்ததாகவும், ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்திற்கு அழைத்து செல்வதாகவும் கூறி ஆட்கொணர்வு மனு ஒன்றை கேரளா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
வழக்கை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்து தந்தையுடன் மகளை அனுப்பி சட்டத்திற்கு புறம்பான தீர்ப்பை வழங்குகிறது.

இருப்பினும் கணவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தொடர்ந்து தம்முடைய மகள் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று பாஜக தந்தை நாடகமாடுகிறார்.
இருப்பினும் மிக உறுதியாக இருந்து 11 மாத வனவாசத்திற்கு பின் தமக்கான அநீதியை உச்சநீதிமன்றத்தில் உரக்க கூறி தமக்கான நீதியை பெற்றுள்ளார் ஹாதியா...
ஹாதியாவின் வெற்றிக்கு இறைவனின் அருளால் அவருடைய மன உறுதியே முக்கிய காரணமாகும்.
இஸ்லாமிய பெண்கள் இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக பிறமத ஆண்களுடன் ஆங்காங்கே ஓடி சென்று திருமணம் முடிப்பதை காண முடிகிறது. ஆனால் எந்த முஸ்லிமும் அவர்களை கொல்வதில்லை.
ஒரு சாதியை சேர்ந்த பெண் இன்னொரு சாதி ஆணை திருமணம் முடித்தால் ஜோடிகள் இருவரையும் கொலை செய்வதை சர்வசாதாரணமாக காண முடிகிறது.
இந்தியாவில் 18 வயது நிரம்பிய பெண் தாம் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பதையும், தமக்கான கணவனை தேர்வு செய்வதையும் இந்திய அரசியல் சாசன சட்டம் அனுமதி அளிக்கிறது.
இந்திய சட்டம் அனுமதித்த வகையில் தமது வாழ்கையை தேர்வு செய்த ஹாதியாவுக்கு இவ்வளவு நெருக்கடிக்கு ஒரே காரணம் இந்தியாவின் சட்டத்தை மதிக்காத பாஜக தந்தையின் மதவெறியே காரணமாகும்.
11 மாதம் சட்டத்திற்கு புறம்பாக தந்தையினால் ஹாதியா அடைத்து வைத்திருக்கும்போது ராகுல் மூலமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தம்முடைய தந்தை அடித்து, உதைத்து, எட்டி மிதிப்பதாகவும். கொடுஞ்சித்ரவதை செய்வதாகவும், தாம் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம் என்றும், தாம் கொலை செய்யப்பட்டால் அதற்கு தம்முடைய தந்தையே காரணம் என்றும் கூறியிருந்தார்.
இப்படி ஏராளமான துயரங்களை சந்தித்து மிக நீண்ட போராட்டங்களுக்கு பிறகே ஹாதியா வென்றுள்ளார்.
ஹாதியா போகிற போக்கில் சொல்லக்கூடிய செய்தி அல்ல, ஹாதியா இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ஓர் வரலாறு !