இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும், வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக வவுனியா இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

இ.போ.ச வடக்கு பிராந்திய முகாமையாளரை இடமாற்றுமாறு கடந்த 18 ஆம் திகதி வவுனியா சாலை ஊழியர்களால் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதியை அடுத்து அந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால் வடமாகாணம் தழுவியதாக மீண்டும் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, வட பிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் இராசரத்தினம் வாமதேவன் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாண போக்குவரத்து நடவடிக்கைகளை நாங்கள் இன்று முடக்கி வைப்பதற்குரிய காரணம் எங்களுடைய வட பிராந்திய முகாமையாளர் ஒருதலைப்பட்சமாக குறிப்பிட்ட நபர்கள் சிலரின் கதைகளை கேட்டுக்கொண்டு செயற்படுவதுடன், பழிவாங்கும் செயற்பாட்டில் நடந்து கொள்கின்றார். வட மாகாணத்தில் தகுதியான பல உத்தியோகத்தர்கள் இருக்கின்ற போதும் தகுதியற்றவர்களுக்கு நியமனம் வழங்கப்படுவதுடன், அவரது கட்சி சார்பானவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றார்.

இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும், வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி  கடந்த 18 ஆம் திகதி எமது சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு செய்தோம். ஆனால் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையால் தொடர் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இப்போராட்டம் காரணமாக இ.போ.ச பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடாமையினால் பாடசாலை மாணவர்கள், அர உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து தரிப்பிடங்களில் இ.போ.ச பேருந்திற்காக காத்திருக்க வேண்டியதோடு பெரும் அசௌகரியங்களிற்கு உள்ளாகியிருந்தனர்.

-வவுனியா நிருபர்-