வவுனியா, கணேசபுரம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் கூட்டு வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கக் கோரியும் அமைதி ஊர்வலம் ஒன்றும் இடம்பெற்றதுடன் வவுனியா அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன அவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

மகளிர் அபிவிருத்தி வள நிலையம் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் இணைந்து இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தன. வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட அமைதி ஊர்வலம் ஏ9 வீதி வழியாகச் சென்று மாவட்ட செயலகத்தில் முடிவடைந்தது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறித்த சிறுமி வன்புனர்வுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கக் கோரியும் மகஜர் கையளிக்கப்பட்டது.  

இவ் ஊர்வலத்தில் மகளிர் அபிவிருத்தி வள நிலையப் பணிப்பாளர்  திருமதி சரோஜா சிவச்சந்திரன், வடமாகாண பெண்கள் அமைப்பின் இணைப்பாளர் ந.கீதாஞ்சலி மற்றும் பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.