ஏறாவூர் நகர சபை பிரிவில் இயங்கிவரும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கத்தினருக்கும், நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயிலுக்கும் இடையிலான விஷேட சந்திப்பு நேற்று (28) நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இச்சந்திப்பின்போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதில், முச்சக்கர வண்டிகளின் தரிப்பிடங்களை ஒழுங்கு படுத்தி நகர சபைக்குரிய நாளாந்த வரியினை முறையாக அறவிடுவது பற்றியும், முச்சக்கர வண்டி தரிப்பிடங்களில் எதிர் நோக்கப்படும் பிரச்சினைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், முச்சக்கர வண்டிகளின் தரிப்பிடங்களுக்கு பெயர் பலகை இடுவது பற்றியும், தரிப்பிடங்களில் வசதிகளை எற்படுத்துவது தொடர்பாகவும் நகர சபைக்கு செலுத்த வேண்டிய நாளாந்த தரிப்பிடக் கட்டணத்தினை முறையாக செலுத்துவது பற்றி விஷேட கவனம் செலுத்தி பேசப்பட்டது. 

நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்த விஷேட சந்திப்பில் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர், செயலாளர், நகர சபையின் நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.ஹூசைன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் வை.ஹாஜா முகைதீன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.தயாளன் மற்றும் வருமான பரிசோதகர் எம்.எஸ்.எம்.தாரிக் ஆகியோர் உள்ளிட்ட முச்சக்கர வண்டிச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
பைஷல் இஸ்மாயில் -