மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் இயங்கிவரும் வாழ்வகம் விஷேட தேவையுடைய அமைப்பானது சுமார் 560 மாற்றுத் திறனாளிகளைக் உள்ளடக்கி இயங்கி வருகின்றது.
இவ்வமைப்பின் ஏற்பாட்டில் அதன் அங்கத்தவர்களை உள்ளடக்கியதாக வருடந்தோறும் நடாத்தப்படும் மாற்றுத்திறனாளிகள் தின விழா இம்முறையும் நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 500ற்கும் மேற்பட்டவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள இவ்விழாவில் மாற்றுத்திறன்கொண்ட 450 பேருக்கான உணவுப் பொதிகளை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வினை சிறந்த முறையில் நடாத்துவதற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான உணவு வழங்குவதற்குமான உதவியினை வழங்குமாறு இவ்வமைப்பினர் விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் சொந்த நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளின் உணவிற்கான ஒருதொகை பருப்பு மூட்டைகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
தனது அரசியல் ரீதியான அபிவிருத்தி மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு மேலதிகமாக எவ்விதமான இன, மத, பிரதேச ரீதியான வேறுபாடுகளுமின்றி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் இத்தகைய பல்வேறுபட்ட மனித நேய பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் இவ்வாறான விடயங்களை முன்னெடுப்பதற்கென அவரால் ஸ்ரீ லங்கா ஷிபா பௌண்டேசன் என்ற சமூக சேவை அமைப்பொன்று நடாத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

எம்.ரீ. ஹைதர் அலி