இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளருடன. இடம்பெற்ற பேச்சுக்கள் தோல்வியடைந்துள்ளதால் வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை பேரூந';துகளின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என வடபிராந்திய சாலைகளின் இணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் எஸ்.வாமதேவன் தெரிவித்துள்ளார்.
இன்று வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளர் சந்திரசிறி அவர்களுக்கும், வடக்கின் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய 6 சாலை ஊழியர்கள், உறுப்பினர்கள் உள்ளடங்கிய தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் மற்றும் வடபிராந்திய பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை உடனடியாக பதவி விலக்குமாறு கோரி வவுனியா சாலை ஊழியர்களால் கடந்த 18 ஆம் திகதி சேவைப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அன்றைய தினம் எமது தலைமைக் காரியாலயத்தால் இவர்கள் இருவரையும் மாற்றித் தருவதாக உறுதி மொழி வழங்கியிருந்தார்கள். ஆனால் 10 நாட்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமையால் செவ்வாய் கிழமை முதல் நாம் வடமாகாணம் தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளோம். இதனால் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தில் பயணிக்கும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வீதிகளில் காத்து இருக்கின்றனர். ஆனால் இன்றைய தினம் எமது சாலைக்கு வருகை தந்த அதிகாரிகள் கூட உரிய தீர்வைத் தரவில்லை. இதனால் நாம் தொடர்ந்தும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பில் இலங்கை போக்குவரத்து சபை தலைவருக்கும், வடபிராந்திய சாலைகளின் இணைந்த தொழிற்சங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறும் எனவும் அதன் பின் இது குறித்து தீர்வு காண்பதாக கொழும்பில் இருந்து வருகை தந்த போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்திருந்த போதும் ஊழியர் தொழிற்சங்கம் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்ததையடுத்து தொடர் புறக்கணிப்பு நடைபெறுகிறது.
அரச பேருந்துகள் சேவையில் ஈடுபடாமையால் வடமாகாணத்தில் பல பகுதிகளில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
-சிவகுமார்-