வவுனியாவில் அங்காடி வியாபாரிகளின் கடைகளை நகரசபை நிர்வாகம் அப்புறப்படுத்துவது தொடர்பாக (27) சிறுவியாபாரிகள் நகரசபை செயலாளரை சந்தித்தனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள அங்காடிகள் வியாபார கடைத்தொகுதி அமைந்துள்ள இடத்தில் துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் அமைக்க நகரசபை நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில் அங்கு வியாபாரம் செய்துவந்த 33 சிறு வியாபாரிகளுக்கு தற்காலிகமாக வவுனியா நகரசபைக்கு அருகாiமையில் கடைத்தொகுதி அமைத்து கொடுக்க நகரசபை நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில் சிறுவியாபாரிகள் தங்களுக்கு மீண்டும் பழைய இடத்திலேயே கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் என நகரசபை செயலாளர் ஆர்.தயாபரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் சிறுவியாபாரிகளான தங்களுக்கு வவுனியா நகரப்பகுதியில் நிரந்தரமான ஒரு இடத்தை ஒதுக்கித்தர வேண்டும் எனவும் அதற்கு அரசியல்வாதிகள் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தினர்.
அங்காடி வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் அமைக்கப்பட்டதன் பின் ஒரு பகுதியில் சிறுவியாபாரிகளுக்கான தற்காலிக கடைத்தொகுதி அமைத்து தருவதாக வாக்குறுதி வழங்கினார். அத்துடன் ஏற்கனவே இது தொடர்பாக அங்காடி வியாபாரிகள் தன்னிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு முறையின் படி ஒப்பந்த அடிப்படையில் துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கான கடைத்தொகுதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்காடி வியாபாரிகளுக்கான நிரந்தர கடைத்தொகுதியானது எதிர்காலத்தில் உள்ளுராட்சி தேர்தலில் தெரிவு செய்யப்படவிருக்கும் மக்கள் பிரநிதிகளின் முடிவுக்கு அமைவாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.