இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் இஸ்லாமிய அறிவையும் ஒழுக்க விழுமியங்களையும் விருத்தி செய்வதற்காக பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் கலாசாரக் குழுவின் ஏற்பாட்டில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் அனுசரணையில் ஏற்பாடு செய்த ஒரு நாள் இஸ்லாமிய வழிகாட்டல் நிகழ்வு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதில் பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு பட்டப் படிப்பினை கற்பதற்காக வருகை தந்த மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் நாம் எதற்காக இங்கு வந்திருக்கின்றோம் நம் பெற்றோர்கள் எதற்காக எங்களை இங்கு அனுப்பியிருக்கிறார்கள் போன்ற ஆழமான கருத்துக்கள் கொண்ட விரிவுரைகள் நடைபெற்றன.
முஸ்லிம் மஜ்லிஸ் கலாசாரக் குழுவின் செயலாளர் ஜே.ஜெசான் ஸலபியின் தலைமையிலும் ஜம்இய்யாவின் நிர்வாகத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் (காசிமி) அவர்களின் வழிகாட்டலிளும் நடைபெற்ற இந்நிகழ்வில் "ஈமானிப பாதையில் இளம் சமூகம்" எனும் தலைப்பில் இம்தியாஸ் யூஸுப் (ஸலபி). "நடைமுறை வாழ்வில் கல்வியின் தாக்கம்" எனும் தலைப்பில் உண்மை உதயம் இஸ்லாமிய சஞ்சிகையின் ஆசிரியர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி). "மனங்களை மாற்றும் மண்ணறை நிகழ்வுகள்" எனும் தலைப்பில் மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் (மதனி) ஆகியோர்களால் விரிவுரைகல் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் ஹிப்ழுல் குர்ஆன் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.