-முர்ஸித்-
2017 ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டு-கல்குடா கல்வி வலயத்தில் முறாவோடை தமிழ் சக்தி வித்தியாலய மாணவன் கல்குடா வலயத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
இம்மாணவன் கல்குடா வலயத்தில் 182 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்று குறித்த பாடசாலைக்கும் கோறளைப்பற்று கோட்டத்திற்கும் பெருமையினை சேர்த்துள்ளார்.
வாழைச்சேனை முறாவோடை தமிழ் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன் செல்வன் பிரதீபன்.நிதுர்ஜன் எனும் மாணவனே இவ்வாறு சித்தியடைந்தார்.
இம்மாணவனுக்கு கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் தி.ரவி மற்றும் கோறளைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் நா குணலிங்கம் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவனின் தந்தை பிரதீபன் தெரிவிக்கையில், " நான் மிகவும் கஷ்டப்பட்டு கூலிக்கு பால் இழுத்து எனது மகனை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்காக படிப்பித்தேன், மேலும் எனது மகனை கற்பித்த ஆசிரியர்களுக்கும் சக்தி வித்தியாலய அதிபர் சா.சுதாகரன் அவர்களுக்கும் அத்தோடு இறைவனுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்" என்று மனம் நெகிழ்ந்து கூறினார்.
மேற்படி பாடசாலை யுத்த காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதுடன் கஷ்டப்பிரதேச பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.