மியன்மாரில் இருந்து உயிர் தப்பி வெளியேறிய முஸ்லிம் அகதிகளை, ரொஹிங்யர்களை அண்மையில் பிக்குகளுடன் சேர்ந்து சிலர் தாக்க முற்பட்ட சம்பவத்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்படப் பல அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இது போன்ற சம்பவங்களைக் கடந்த காலங்களில் அதிகளவில் எதிர்கொண்டவர்களான தமிழர்களின் தலைவர்கள், சம்பவத்தை உடனடியாகக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஒரே ஆறுதலாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபை அமர்வில் இந்த விடயத்தை எடுத்துக் கொண்டு உரையாற்றியிருக்கிறார்.
மியன்மாரில் ரொஹிங்யர்களுக்கு எதிராக நடப்பது இனச் சுத்திகரிப்பு என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இனச் சுத்திகரிப்பை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கான பாலபாடம் போன்று மியன்மார் படையினரின் செயற்பாடுகள் இருக்கின்றன என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
அப்படிப்பட்ட ஒரு நிலையில், இலங்கையில் இனப்படுகொலையை எதிர்கொண்டவர்கள், இன்னும் அந்த ஆபத்தில் இருந்து நீங்காதவர்கள் ஆகிய தமிழர்கள் ரொஹிங்யர்களுக்கு தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது ருவிற்றர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார், மாகாண சபையில் ஒருவர் குரல் கொடுத்தார், இவற்றுக்கெல்லாம் முன்பாகச் சிலர் யாழ். நகரில் ஒன்று கூடி ஒரு கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்கு மேல், தமிழ்ச் சமூகம் இது பற்றிப் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.
ஆனால், தமக்குக் கொடுமைகள் நிகழும் போதும், தாம் அடக்குமுறைக்கு உள்ளாகும் போதும் மொத்த உலகமும் எழுந்து நின்று கேள்வி கேட்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
இப்போதும் எங்கள் பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட்டுத் தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என்று அழுத்தமாக எதிர்பார்ப்போம். ஆனால் அடுத்தவருக்குத் துயர் வரும் போது நமக்கு ஏன் வம்பு என்று திரும்பிக் கொண்டு விடுவோம்.
இது ஒருபுறமிருக்க, ரொஹிங்யர்களுக்கு எதிராக பிக்குகள் தலைமையில் இடம்பெற்ற அடாவடிகள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எழுப்பியுள்ள கரிசனை கவனத்திற்குரியது.
இனவாதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த அரசு கொள்கையளவில் தீர்மானம் எடுத்திருக்கையில், இது போன்று இனவாதத்தோடு செயற்படுபவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம், ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
போருக்குப் பின்னர் இலங்கையில் பௌத்த மேலாதிக்கத்தால் முஸ்லிம்கள் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டு வரும் நிலையில், மற்றொரு பௌத்த நாடான மியன்மாரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள முஸ்லிம் அகதிகள் இலக்கு வைக்கப்பட்டதன் பின்னணியில் இனவாதத்துடன் செயற்படுபவர்கள் நிச்சயம் கண்டறியப்பட வேண்டும்.
சிங்கள, பெளத்த வாக்குகளுக்காக இன்று இந்த விடயத்தை அரசு கண்டு கொள்ளாமல் விடுமானால், அதுவே பின்னர் இந்த அரசின் அனைத்து நல்ல முயற்சிகளுக்கும் ஆபத்தாக மாறி விடும். தீர்வு முயற்சிகள், நல்லிணக்க முயற்சிகள் என அனைத்துக்குமே ஆபத்தாக முடியும்.
இனவாதப் பின்னணியில் இயங்கி, இலங்கையைப் பெளத்த சிங்கள நாடாக நிலைநாட்ட முயற்சிப்பவர்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காத வரையில், நிரந்தரமான தீர்வு ஒன்று இலங்கையில் ஏற்படவே போவதில்லை.
பெளத்த சிங்கள வாக்குகளுக்காக இத் தகைய இனவாதச் செயற்பாடுகளை கண்டும் காணாமலும் அரசு நடந்துகொள்வது எதிர்காலத்திற்கும் பெரும் ஆபத்தாக முடியும்.
எனவே இனவாதிகளையும் அவர்களின் பின்னால் இருந்து இயக்குபவர்களையும் கண்டறிந்து களையெடுக்க வேண்டும் அரசு.