(எம்.ஜே.எம்.சஜீத்)
இலங்கையில் தஞ்சம் அடைந்த ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளுக்கு எதிரான மனிதாபிமானமற்ற இனவாதச் செயற்பாடுகளை சில மதத்தலைவர்கள் முன்னெடுத்து வருவதனால் இலங்கையின் நற்பெயருக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது.
மனிதாபிமானமற்ற முறையில் பர்மா நாட்டு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், உயிருடன் சித்திரவதைச் செய்யப்பட்டு கொல்லப்படுகின்றனர். அந்த நாட்டில் இருந்து தங்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக படகு மூலம் அவுஸ்ரேலியா செல்வதற்கு வரும் வழியில் கடல் கொந்தளிப்பால் இலங்கை கடற்பரப்பில் உட்பிரவேசித்தால் நீதி மன்றம் கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்ட போது சில பௌத்த மதத்தலைவர்களும், இனவாதிகளும் நேரடியாகச் சென்று இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கும் நமது நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது என இலங்கையில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் இவ் இனவாத செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்ற அவசரப்பிரேரனையை கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு பிரதி தலைவர் இந்திர குமார பிரசன்ன தலைமையில் நேற்று நடைபெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்...
உலகத்தில் யுத்தங்கள், இனப்படுகொலைகள் நடைபெறும் நாடுகளில் இருந்து தங்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக பல நாடுகளில் தஞ்சம் கோறும் அகதிகளுக்கு அதிக நாடுகள் மனிதாபிமானத்துடன்; இடம் வழங்கி பாதுகாப்பும் வழங்கியுள்ளனர்.
நமது நாட்டில் 30 வருட காலம் நடைபெற்ற யுத்தத்தின் கொடுமைகளின் போது நமது நாட்டை சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அகதிகளாக தஞ்சம் கோரிய போது பல நாடுகள் நமது இலங்கை அகதிகளை இடம் கொடுத்து மனிதாபிமானத்துடன் செயற்பட்டதனை நாம் மறந்து விட முடியாது.
நமது நாட்டில் வாழும் சிங்கள மக்கள் அரசியல் தலைவர்கள் 95மூ வீதமானோர் இனவாதத்திற்கு எதிரானவர்கள் என்பது யதார்தமாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் 30 ம் திகதி ரோஹிங்ய முஸ்லிம் அகதிகள் 30 பேருடன் அவுஸ்ரேலியா நாட்டை நோக்கி பயனித்த படகு யாழ்ப்பனம், காங்கேசன்துரை கடல் பரப்புக்குள் நுழைந்ததையடுத்து இலங்கை கடற்படையினர் இப்படகினையும், அகதிகளையும் கைது செய்து சுன்னாகம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பிரகாரம் மிறியானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். இதன் பின்னர் நீதி மன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் அனுசரனையுடன் இவ் அகதிகளை வீடு ஒன்றில் தங்க வைப்பதற்காக அனுமதியினை நீதிமன்றம் வழங்கியதையடுத்து கல்கிஸ்ஸ வீடு ஒன்றில் இவ் அகதிகள் வாழ்ந்து வந்தனர். அகதிகளாக தஞ்சமடைந்த நிலையில் வாழ்ந்து வந்த இந்த அகதிகளை உடனடியாக வசித்து வந்த வீட்டிலிருந்தும், இலங்கையிலிருந்தும் இவ் அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்று சில இனவாத குழுக்கள் கோரிக்கை விடுத்து எதிர்த்து ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் பகிரங்கமாக இனவாதக் கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளின் விடயத்தினை முன்வைத்து நமது நாட்டில் வரலாற்று இன உறவுடன் வாழும் சிங்கள், முஸ்லிம் சமூகத்தை இனவாதங்களை உருவாக்கி இனகலவரம் ஒன்றிற்கு வித்திடுகின்றனர்.
இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்க வேண்டிய பௌத்த மதத் தலைவர்கள் பகிரங்கமாக நீதிமன்றத்தினால் கையாளப்படுகின்ற அகதிகள் தொடர்பான விடயத்தில் செயற்பட்ட விதம் பௌத்த மதத்திற்கே அபேகீர்த்தி ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது.
இலங்கை அகதிகளாக ரோஹிங்கிய முஸ்லிம்கள் 2006 ஆம் ஆண்டிலும் 2012 ஆம் ஆண்டிலும் வந்து சென்றுள்ளனர். ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகள் இலங்கைக்கு அடாத்தாக வரவில்லை அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் வழியில் கடல் கொந்தழிப்பால் வந்த அகதிகளை கடற்படையினர் இலங்கை கடற்பரப்புக்குள் வந்தனர். இவ்வாறு உயிர் தப்பி வந்த அகதிகளை மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவதற்கு முற்பட்டனர்.