-சிவக்குமார்-

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (29) வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் நடைபெற்றது.

பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வாணி விழா நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

வரவேற்பு நடனத்தை தொடர்ந்து பாரதரத்தனா நாட்டியப்பள்ளி மாணவி கார்த்திகா சந்திரகாசனின் மயில் நடனமும் அதனைத்தொடர்ந்து பண்டாரிக்குளம் மாணவர் வழங்கிய இசைச் சங்கம நிகழ்வு மற்றும் அகிலாண்டேஜஸ்வரி நுண்கலைக் கல்லூரி மாணவிகளின் இசை நிகழ்வு என்பன நடைபெற்றதுடன் பண்பாடும் மொழியும் என்னும் தலைப்பில் செல்வன் எஸ்.றிணோஜின் எழுச்சி உரையும் இடம்பெற்றிருந்தது.

இறுதி நிகழ்வாக  கலாபூசணம் சிவசோதியின் இசைக் கச்சேரி நிகழ்வு இடம்பெற்றதுடன் வவுனியா பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட இலக்கிய கலைப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
வாணி விழா நிகழ்வில் கலாபூசணம் தமிழ் மணி அகளங்கள், தமிழ் விருட்சத்தின் தலைவர் எஸ். சந்திரகுமார், மாவட்ட கலாசார உத்தியோகத்தர். இ.நித்தியானந்தன், பிரதேச கலாசார உத்தியோகத்தர். ஆர்.பிரதீபன் மற்றும் மாணவர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.