மியன்மார் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பூஸா முகாமை அண்டியுள்ள பகுதிகளில் அவர்களுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக காலி நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
மியன்மாரில் இருந்து கடல்மார்க்கமாக வந்த 30 மியன்மார் அகதிகள் நீதிமன்ற உத்தரவின் படி தெஹிவளைபகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தங்கவைக்கபட்டடிருந்த மியன்மார் அகதிகளின் வீட்டின் முன்னாள் கடந்த 26 ஆம் திகதி பிக்குகள் அடங்கிய குழுவினர் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, குறித்த 30 மியன்மார் அகதிகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி பூஸா தடுப்பு முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே மியன்மார் அகதிகள் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ள பூஸா தடுப்பு முகாமைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் எவ்வித ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுவதற்கு காலி நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதேவேளை, தெஹிவளைப் பகுதியில் மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்னாள் கலகம் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.