அனுராதபுரத்தில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசம்: அவர்களின் கோரிக்கைகளை மனிதாபிமானத்துடன் பரிசீலியுங்கள்! சிவசக்தி ஆனந்தன் 

வவுனியா நீதிமன்றத்திலேயே தமது வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 3 தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளையும், நீண்ட காலமாக நீதி விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதனால், அவர்களை பொது மன்னிப்பின் கீழ் மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளினதும் கோரிக்கைகளை மனிதாபிமானத்துடன் அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் தமது வழக்குகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆறாவது நாளாக 3 தமிழ் அரசியல் கைதிகள் போராடி வருகின்றார்கள். அவர்களையும் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெள்ளிக்கிழமை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.  இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மூன்று அரசியல் கைதிகள் தங்களுடைய வழக்குகளை வவுனியாவிலேயே விசாரிக்க வேண்டும் எனக் கோரியும், தங்களை மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுடன் வைத்திருக்கக் கூடாது எனக் கோரியும் ஆறாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள்.

அவர்களில் ஒருவருடைய உடல்நிலை மோசமாகியிருக்கின்றது. சிறைச்சாலை வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

அவர்களுடைய வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும். அவர்களுடைய வழக்குகள் வேறிடத்திற்கு மாற்றப்பட்டால், சிங்களம் தெரியாத அவர்கள் மொழிப் பிரச்சினைக்கும், வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க நேரிடும். எனவே அவர்களுடைய வழக்குகளை வவுனியாவில் விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியிருந்தோம். 

தமிழ் அரசியல் கைதிகளின் அந்தக் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளார். அதேவேளை, மரண தண்டனை பெற்றுள்ள தண்டனைக் கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் கைதிகள் தங்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரியிருந்தனர். 

இவர்களுடைய கோரிக்கையை ஏற்று அவர்களை வேறிடத்திற்கு மாற்றுமாறு நீதிமன்றத்தினால் உத்தவிடப்பட்டுள்ள போதிலும், சிறைச்சாலை அதிகாரிகள் அதற்குரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. இது குறித்து சிறைச்சாலை அதிகாரிகளுடன் எடுத்துரைத்து, அந்தக் கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருவதனால், அவர்களை சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கோரினேன். அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்கள் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். 

அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக புதிய அரசாங்கமோ, தமிழ் அரசியல் தலைவர்கள்இ தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது மனித உரிமைச் செயற்பாட்டாளர்களோ, சட்டத்துறை சார்ந்த நலன்விரும்பிகளோ ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காத காரணத்தினால் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளவர்களில் 16 தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் வழக்குகளைத் துரிதமாக விசாரணை செய்து தாங்கள் சிறைச்சாலையில் 6, 7 வருடங்களுக்கு மேலாக அனுபவித்துள்ள சிறைவாச காலத்தை கழித்துக் கொண்டு தண்டனை வழங்குமாறு தாங்களாகவே முன்வந்துள்ளார்கள். 

சிறைவாசத்தைத் தொடர்ந்தும் அனுபவிக்க முடியாத நிலையில், தண்டனை பெற்றாவது, வெளியில்  வந்துவிட வேண்டும் என்பதற்காக இவ்வாறு முன்வந்துள்ளவர்களுடைய வழக்குகள் புதிய வழக்குகளைப் போலவே நடத்தப்பட்டு, முழுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எந்தக் காரணத்தைக் கொண்டும், அவர்கள் அனுபவிக்கின்ற சிறைவாச காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்றும் அறுதியிட்டு அதிகாரிகளினால் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனால் அவர்கள் தங்களுக்கு என்ன வகையில் தண்டனை வழங்கப்படும் என்று தெரியாமல் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள். சொல்லுந்தரமற்ற வகையில் அவர்கள் கவலை கொண்டிருக்கின்றார்கள். 

எனவே, இந்த தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகள் கணக்கில் எடுக்கப்பட்டுஇ அவர்கள் மனிதாபிமான ரீதியில் விடுதலை செய்யப்படுவதற்கு சம்பந்தப்பட்டவர்களும் அரசாங்கமும் முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.