அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்தில் ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக தூண்டப்பட்டுள்ள வன்முறைக் காரணமாக இதுவரை 370,000 மக்கள் பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் தரை வழி, கடல் வழி, பங்களாதேஷ்-மியான்மரின் எல்லையில் உள்ள நாப் ஆற்றின் வழியாக பங்களாதேஷில் தஞ்சமடைகின்றனர். இப்படி பங்களாதேஷில் தஞ்சமடைய முயன்ற 97 ரோஹிங்கியாக்கள் பயணத்தில் இடையில் இறந்துள்ளதாக பங்களாதேஷ் காக்ஸ் பஜார் மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி பிரவோஸ் சந்திர தார் தெரிவித்துள்ளார்.
நேற்று நாப் ஆற்றங்கரையோரம் மூன்று பெண்கள், குழந்தைகள் உட்பட ஒன்பது ரோஹிங்கியாக்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. இவர்கள் மியான்மரின் துப்பாக்கி சூட்டிலோ அல்லது நீரில் மூழ்கியோ இறந்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகின்றது. ஒரு சிலரின் உடலில் குண்டடிப்பட்ட காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி அரக்கான ரோஹிங்கியா சல்வேசன் ஆர்மி எனும் ரோஹிங்கியா ஆயுதக்கிளர்ச்சிக்குழு காவல் மற்றும் ராணுவ அரண்களை தாக்கியதைக் காரணமாக வைத்து ரோஹிங்கியா கிராமங்களில் நுழைந்த மியான்மர் ராணுவமும் புத்த பேரினவாதிகளும் ஆயிரக்கணக்கான வீடுகளை எரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த ஆயுதக்கிளர்ச்சிக்குழு அறிவித்த போர் நிறுத்த உடன்பாட்டை மியான்மர் ராணுவம் நிராகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மட்டத்தில் மியான்மருக்கு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தாலும், ரோஹிங்கியா மக்கள் மீதான வன்முறை தொடர்ந்து வருகின்றது. மியான்மரில் 11 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட ரோஹிங்கியா மக்கள், அந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1982 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் படி குடியுரிமையற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.