இந்தியா: உத்திரப்பிரதேசத்தில் 11-ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் தீவிரவாதி என கூறியதால், மாணவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் 11-ஆம் வகுப்பு மாணவன் கடந்த 23-ஆம் திகதி தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனால் மாணவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அப்போது மருத்துவர்கள் மாணவன் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டதன் காரணமாகவே இறந்துவிட்டதாக கூறியதால், பொலிசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது, மாணவன் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது.

அதில், நான் துப்பாக்கி வைத்துள்ளேனோ என எனது புத்தகப்பை எப்போதும் சோதனையிடப்படுகிறது. வகுப்பின் கடைசி வரிசையில் நான் உட்காரவைக்கப்படுகிறேன்.

என்னுடன் யாரும் பேசக்கூடாது என ஆசிரியர் கூறியுள்ளார் என்றும் தன்னை ஆசிரியர் தீவிரவாதி போல சித்தரிப்பதாகவும் மாணவன் வேதனையுடன் அக்கடிதத்தில் எழுதியிருந்தார்
இதனையடுத்து, மாணவன் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் அங்குள்ள ஆசிரியர்களிடம் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.