சாய்ந்தமருது மக்களின் நீண்டகால தாகமாக இருந்த உள்ளூராட்சி மன்றம் என்ற கனவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இடைவிடாத முயற்சியால் இம்மாத இறுதிக்குள் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமில் தெரிவித்தார்.
சாய்ந்தமருதுதை தனி உள்ளூராட்சி மன்றமாக பிரகடனப்படுத்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சில் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் 14.08.2017 ஆம் திகதியன்று இடம் பெற்றது,
இங்கு கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீனிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை இம்மாத கடைசி வாரத்திற்குள் விசேட வர்த்தமானி மூலம் வெளியிடுவதாகவும் தனது அமைச்சின் செயலாளருக்கு இதுவிடயமாக உத்தரவிட்டு இருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீனிடமும், பிரதித் தலைவர் ஜெமிலிடமும் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அண்மைக்காலமாக முகநூல்களிலும் பத்திரிகைகளிலும் சாய்ந்தமருது உள்ளூராட்சிசபை சம்பந்தமாக பலரும் உரிமை கோரும் தகவல்கள் பரிமாறப்படுகிறதே என்று அமைச்சர் றிஷாட்டின் இணைப்புச் செயலாளர் இர்சாட் ரஹ்மத்துல்லாவினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் சம்பந்தமாக ஆரம்பம் முதல் இன்றுவரை என்னுடன் தொடர்புடன் இருப்பவர்களும், இதனை உரிமை கோருவதற்கு முழுத் தகுதியுடையவர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாட் மற்றும் ஜெமீலைத் தவிர வேறு யாரும் இல்லை என்று ஆணித்தரமாக கூறிவிட்டு தனது கென்ய நாட்டுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
குறித்த விசேட சந்திப்பின்போது கட்சியின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம்.ஜெமில், முன்னாள் கொழும்பு மாநகர சபை ஆணையாளரும், NEDHA தலைவருமான உமர் காமீல் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்சாட் ரஹ்மத்துல்லா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்.வை.அமீர்