உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை பிற்போட்டுவிட்டு மாகாண சபைகளின் கால எல்லையையும் நீடிக்க முனைவது மக்கள் இறைமையை மீறும் செயற்பாடாகும். எனவே இதற்கு சர்வஜன வாக்குரிமை கோரப்பட வேண்டும் என குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துளார்.
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச மாகாண சபை தேர்தல்களை காலம் தாழ்த்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நேற்று விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
மாகாண சபை தேர்தல்களை காலம் தாழ்த்துவதற்காக 20 ஆவது அரசியலமைப்பு திருத்த்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சபரகமுவ, கிழக்கு , வடமத்திய மாகாண சபைகளிக் கால எல்லை ஒக்டோபர் மாத்தின் முதற்பகுதியில் நிறைவடைந்துவிடும். ஆனால் 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டால் இவ்வருடத்திலும் அடுத்த வருடத்திலும் கால எல்லை நிறைவடையும் மாகாண சபைகளின் காலம் 2019 ஆம் ஆண்டு வரையில் நீடிப்பு செய்யப்படும்.
இவ்வாறு மாகாண சபைகளின் காலத்தை நீடித்து தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவது மக்களின் இறைமை அடிப்படையிலான தேர்தல் உரிமையை கேள்விக்கு உள்ளாக்கும் செயற்பாடாகும். கடந்த இரு வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட வேண்டிய தேர்தலையும் பிற்போட்டுள்ள நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் இவ்வாறானதொரு செயற்பாட்டினை முன்னெடுக்கின்றது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியன்று சூழ்ச்சியால் ஆட்சியை பிடித்த அரசாங்கத்தின் மற்றுமொரு சூழ்ச்சியே மாகாண சபை தேர்தல் காலம் தாழ்தப்படுவதற்கான திருத்தச் சட்டமாகும். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியே இந்த அரசாங்கத்தின் ஜனநாயகத்தை தலைகீழாக புரட்டிப்போடும் செயற்பாடுகள் ஆரம்பித்தன. 144 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தவரை பிரதமராக நியமிக்காமல் 44 பேரின் ஆதரவு மாத்திரமே இருந்த ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஆகிய பல தரப்புக்களின் உதவியிடன் சுதந்திர கட்சியின் தலைமைப் பொறுப்பையும் தற்போதைய தலைவர் தனது கையில் எடுத்தார். அப்போதிருந்த நீதியரசரை ஜனாதிபதி செயலகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு காகிதத்துண்டினை காண்பித்து நீக்கிவிட்டார்கள். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பிரதான வாக்குறுதியாக நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது என்று கூறப்பட்டாலும் 19 ஆவது திருத்தத்தில் நிறைவேற்று அதகாரம் நீக்கப்படும் என்று கூறப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள். நிறைவேற்று அதிகாரம் முன்பை விடவும் வலுப்பெற்றே காணப்படுகின்றது.
நாம் அனைவரும் அரசியலுக்கு பிரவேசிக்க வழிசமைத்து தந்த கட்சியை பிளவுபடுத்திவிடக்கூடாது என்ற காரணத்தினாலே 2015 ஆம் ஆண்டிலும் நான் சுதந்திர கட்சியில் போட்டியிட்டேன். அப்போது எனக்கு பிரதமர் பதவியை வழங்குவதாக வாக்குறுதியளித்துவிட்டு தேர்தல் இடம்பெறுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரை பதவி நீக்கிவிட்டு தேர்தல் முடிவையும் தற்போதைய ஜனாதிபதி மாற்றியமைத்தார். இவ்வாறான பின்னணியில் நடந்த ஒரு தேர்தல் எவ்வாறு நியாயமானதாக அமையும்?
அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை சேர்ந்த ஜனாதிபதிக்கு ஆதரவான 40 பேருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டது. அதில் சிலர் தேசிய பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள். அத்துடன் 51 பேர் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை விடுத்துவிட்டு 17 பேர் மாத்திரமே இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவ்வாறு எதிர்க்கட்சியையும் தன்வசப்படுத்திக்கொண்டு முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றுவதாக கூறிவிட்டு அதிலும் தமக்கு தேவையானவர்களுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் இன்று கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சகலரும் எதிர்த்தால் அதனை நிறைவேற்றிக்கொள்வதற்கான மூன்லிரண்டு பலம் இல்லாது போய்விடும். இது மக்களின் இறைமையுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால் சர்வஜன வாக்குரிமையும் வேண்டும். அதனால் குறித்த விடயம் குறித்து உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவும் எதிர்பார்த்துள்ளோம். இதற்கான அனைத்து சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் கைகோர்க்க வேண்டியது அவசியமாகும்.
இந்த அரசாங்கத்திற்கு மாகாண சபை தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் தற்போது காலம் நிறைவடையவுள்ள மாகாண சபைகளையும் அதற்கு அண்மித்த காலங்களில் நிறைவடையவுள்ள மாகாண சபைகளையு கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டுமே தவிர 2019 வரையில் தேர்தல்களை பிற்போடக்கூடாது. (வீ)