பாராளுமன்ற உறுப்பி னர்களுக்கான உத்தேச நடத்தைக் கோவையின் இறுதி வரைவை சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று சபைக்கு சமர்ப்பித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற உத்தேச நடத்தைக் கோவையின் இறுதி வரைவை சமர்ப்பித்து சபாநாயகர் உரையாற்றுகையில்,
சட்டவாக்கத்தின் மதிப்பும் கௌரவமும் பாதுகாக்கப்படுவதற்கும், சட்டவாக்க உறுப்பினர்கள் என்றவகையில் எம்மிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் அவசியமான உயர்மட்டம் தொடர்பில் பொதுமக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் நிமித்தமும், உறுப்பினர்களின் பாராளுமன்ற அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவசியமாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் இறுதி வரைவை எதிர்வரும் தினமொன்றில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வகையில் அந்த வரைபை சமர்ப்பிப்பது வரலாற்று ரீதியான தருணமொன்றாக குறிப்பிட விரும்புகிறேன்.
பல்வேறு மட்டங்களிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் கல்விமான்களுடனான ஆராய்தல்களின் போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களை முறையாக மதிப்பீடு செய்து வரைவாகத் தயாரித்து சில மாதங்களுக்கு முன்னர் சகல எம்.பி.க்களுக்கும் வழங்கப்பட்டதன் பின்னர் கிடைக்கப்பெற்ற பல்வேறு கருத்துக்கள் மற்றும் யோசனைகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து இறுதியாக சட்ட வரைஞரினதும் உதவியுடன் உரிய முறையில் இந்தகோவை தயாரிக்கப்பட்டதாக இந்தசபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். (வீரகேசரி)