மிரிஹான தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகள் 32 பேரையும் நாளைய தினத்திற்குள் (11) கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மல்லாகம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம், மியன்மார் அகதிகளை ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்கள விசாரணைப் பிரிவின் உதவிக் கட்டுப்பாட்டாளர் எம்.ஜி.வி. காரியவசம் குறிப்பிட்டார்.
இந்த அகதிகளை உடனடியாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் ஒப்படைக்குமாறு குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளுக்கு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய, மியன்மார் அகதிகள் 32 பேரும் இலங்கைக்கான ஐ.நா. அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி மியன்மாரின் ரோஹிஞ்சா அகதிகள் 32 பேரையும் காங்கேசன்துறை கடலில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நாடற்ற இந்த அகதிகள் 32 பேரில் இலங்கையில் பிறந்த சிசுவொன்றும் அடங்குகின்றது.
1950 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான கொள்கை சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்பதால், அதுகுறித்து விசேட கவனம் செலுத்தி, மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவை ஆதாரமாகக்கொண்டு அகதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்