மாணவர்களின் இஸ்லாமிய அறிவுத் திறனை விருத்தி செய்யும் நோக்கில் இஸ்லாமிய அறிவுத் திறன் போட்டி நிகழ்ச்சிகளை அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் இவ்வருடம்(2017) ரமழான் மாத்தில் நடாத்தியது. இப்போட்டிகளுக்கு பல பிரதேசங்களிலுமிருந்து நூற்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்து கலந்து கொண்டனர்.

இதன் போது கிராஆத் போட்டி, அதான் ஒலித்தல், அரபு எழுத்தணிக்கலை, ஹதீஸ் மனனப் போட்டி, ஆரம்ப ஐந்து ஜூஸூக்குள் மனனப்போட்டி, பேச்சுப் போட்டி, அரபுக் ஹஸீதாப் போட்டி, துஆ மனனம் போன்ற போட்டிகள் இடம் பெற்றன.

இப்  போட்டிகளில் வெற்றி பெற்ற 48 வெற்றியாளர்களுக்கும் பெறுமதியான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் தலைவர் என்.எம்.நஜாத் தலைமையில் கடந்த சனிக்கிழமை(05) அட்டாளைச்சேனை அரபா வித்தியாலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வருடங்களை கடந்து அல்லாஹ்வின் உதவியால் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. எம் சமூகத்திற்கு தேவையான பல திட்டங்களை அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம்(ACMYC) காலத்திற்கு காலம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது என மக்கள் பேசுகின்றார்கள் ஆனால் உங்களின் பார்வைக்கு தென்படுகின்ற இந்த  ஒவ்வொரு திட்டங்களும்;  பலருடைய தியாகங்களினதும், முயற்சிகளினதும், ஆலோசனைகளினதும், நிதி உதவிகளினதும் வெளிப்பாடே ஆகும். இத்திட்டங்களுக்கு பல வகையிலும் உதவிகள் புரிந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று இவ்மைப்பின் தலைவர் என்.எம்.நஜாத் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.  

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருமலை மாவட்ட நீதிபதி கௌரவ அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ், கௌரவ அதிதியாக அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், விசேட அதிதியாக அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்ஷான், மற்றும் அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப், அட்டாளைச்சேனை பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஏ.நஹ்பிஷா, எம்.எஸ்.றஜாயா, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.அன்சார், கண்ணியமிக்க உலமாக்கள், பெற்றோர்கள், இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜே.எம்.சஜீத்