இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளிவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட செய்தியில், இந்தோனேசியா, Bengkulu மாகாணம் மேற்கு பகுதியில் 73 கிமீ தொலைவில், கடலுக்கு அடியில் 35 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் தற்போது வரை வெளியாகாத நிலையில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா எனத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் அனைத்து கடலோர பகுதிகளுக்கும் வானிலை அவதான நிலையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை இடர் முகாமைத்துவத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி, சுமத்ரா தீவில் அருகில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுவொரு எச்சரிக்கை மாத்திரமே, சுனாமி ஏற்படும் என அறிவிக்கப்படவில்லை.
இலங்கையின் கரையோரப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றோம், எனவே மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.
தொடர்ந்தும் வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்து நிலைமையினை அவதானித்து வருகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.