வாழைச்சேனையில் பாடசாலை மைதானக் காணியை மீட்பதாக கூறி இன்று மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் முன்னெடுக்கப்படட ஆர்ப்பாட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு - முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான காணியின் ஒரு பகுதியை சட்டவிரோதமான முறையில் சிலர் ஆக்கிரமித்திருந்தாக கூறியே இது இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த காணி வேலியோரம் மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் வேலியை தகர்க்க முற்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி நீதிமன்றத்தின் தடை உத்தரவுப் பத்திரத்தை வேலியில் ஒட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற தடை உத்தரவை கிழித்தெறிந்த மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் வேலி கம்பை பிடுங்கி எறிந்த நிலையில் அவரோடு வந்த பொதுமக்களும் வேலியை பிடுங்க முற்பட்டுள்ளனர்.

வேலியை பிடுக்க முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்த நிறுத்த முற்பட்ட நிலையில், மீண்டும் வேலியை பிடுங்கிய போது  பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டை பிரயோகம் செய்து மோதலை சுமூக நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த தந்த கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அநுர தர்மதாச மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரதன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நாளைய தினம் காணி தொடர்பான கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறும், பாடசாலை காணி வரைபடத்தில் உள்ளவாறு காணி பெற்றுத் தரப்படும் என கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அநுர தர்மதாச உறுதியளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் கலைந்து சென்றதுடன், பொதுமக்களை தாக்கியதாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் அத்தியட்சகரிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளர்.