ஊழலுக்கு எதிரான குழுவின் அலுவலகத்தை தொடர்ந்தும் நடத்திச் செல்வதா இல்லையா என்பது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால், அந்த அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் தெரியப்படுத்த, கடந்த வருடம் ஜனவரி மாதம் குறித்த அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. 

அதன் பதவிக் காலம் இவ் வருட ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், பின்னர் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. 

இதற்கமைய, கடந்த 30ம் திகதியுடன் அந்தக் கால எல்லையும் நிறைவடைந்த நிலையில், அதன் கால எல்லையை நீடிக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இந்த அலுவலகம் அமைக்கப்பட்டதன் பின்னர், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. 

ஊழல் செயற்பாடுகள் குறித்த விசாரணைகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஊழல் மோசடிக்கான அலுவலகம் தற்போது, தமக்கு வரும் முறைப்பாடுகளை பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருவதாக, தெரியவந்துள்ளது. 

இந்தநிலையில் ஊழலுக்கு எதிரான, குழுவின் அலுவலகத்தின் கால எல்லையை தொடர்ந்தும் நீடிக்க வேண்டிய தேவையில்லை என்பது அரசாங்கத்தின் கருத்து எனத் கூறப்படுகின்றது.